| ADDED : டிச 26, 2025 05:33 AM
காரைக்குடி: கல்லல் வழியாக செல்லும் மணிமுத்தாற்றில் செப்டிக் டேங்க் கழிவு கொட்டப்படுவதோடு, சாலையோரம் குப்பை மற்றும் கோழிக்கழிவு கொட்டப்படுவதால் சுகாதாரக் கேடு நிலவி வருகிறது. கல்லல் ஒன்றியத்தில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இங்கு கண்மாய் நீர் ஆதாரமாக விளங்கும் மணிமுத்தாறு ஏரியூரில் தொடங்கி கல்லல் வழியாக எழுவன்கோட்டை, அனுமந்தகுடி சென்று தொண்டி வழியாக கடற்கரையில் கலக்கிறது. 70 கி.மீ., தூரமுள்ள இந்த ஆற்றில் ஏராளமான தடுப்பணைகளும் 3க்கும் மேற்பட்ட அணைக்கட்டுகளும் உள்ளன. விவசாயிகளின் நீர் ஆதாரமாக விளங்கும் கல்லல் மணிமுத்தாற்றில் செப்டிக் டேங்க் கழிவு கொட்டப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். மணிமுத்தாற்றின் அருகில் குப்பை, கோழிக்கழிவு, மீன் கழிவு கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரக் கேடும் நிலவி வருகிறது. மக்கும் குப்பை மக்காத குப்பை என்று தரம் பிரித்து உரமாக மாற்றப்பட வேண்டிய குப்பை கிடங்கு புதர் செடிகள் வளர்ந்து பயனற்று கிடக்கிறது.