| ADDED : டிச 26, 2025 05:31 AM
காரைக்குடி: மாவட்டத்திற்கு உட்பட்ட பெரும்பாலான பேரூராட்சிகளில் செயல் அலுவலர் பணியிடங்கள் காலியாக இருப்பதால், நிர்வாக பணிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.மாவட்ட அளவில் 11 பேரூராட்சிகளில் 6 இடங்களில் செயல் அலுவலர் பணியிடங்கள் பல மாதங்களாக காலியாகவே உள்ளன. இதனால் கூடுதல் பணியிடங்களை 5 செயல் அலுவலர்களே சேர்த்து கவனிக்கும் அளவிற்கு நிர்வாகத்திற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பேரூராட்சி பகுதியில் வீடு, குடிநீர், சொத்து வரி வசூல், சுகாதாரம், குடிநீர் வழங்கல், தெருவிளக்கு பராமரிப்பு, கவுன்சில் கூட்டங்களை நடத்தி தீர்வு காணுதல் போன்று அனைத்து பணிகளையும் செயல் அலுவலர் தலைமையில் தான் அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். ஆனால், மாவட்ட அளவில் 6 பேரூராட்சிகளில் செயல் அலுவலர்களே இல்லாததால், வரி வசூல், குடிநீர் வினியோகம், சுகாதாரம் கடைபிடித்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளிலும் பாதிப்பு ஏற்படுகிறது. மாவட்ட அளவில் உள்ள 11 பேரூராட்சிகளில் தற்போது 5 பேரூராட்சிகளில் மட்டுமே செயல் அலுவலர்கள் உள்ளனர். இவர்களும் 2 முதல் 3 பேரூராட்சிகளை கூடுதலாக கவனிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் நிர்வாக பணிகள், வரிவசூல், சுகாதார பணிகள் அனைத்திலும் பாதிப்பு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யுமாறு செயல் அலுவலரிடம் தான் முறையிட முடியும். அவரது பணியிடமே காலியாக இருப்பதால் யாரிடம் குறைகளை கூறி, நிவர்த்தி பெற்று செல்வது என தெரியாமல் கவுன்சிலர்கள் தவிக்கின்றனர். எனவே பேரூராட்சிகளில் காலியாக உள்ள செயல் அலுவலர் பணியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கையை நகராட்சி நிர்வாகங்கள் துறை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.