| ADDED : ஜன 30, 2024 12:35 AM
சிவகங்கை: சிவகங்கை அருகே சக்கந்தி ஊராட்சி உலகநாதபுரத்தில் பூமிக்கடியில் நிலக்கரி உள்ளிட்ட பெட்ரோலியப்பொருட்கள் இருக்கிறதா என்ற மத்திய புவியியல் ஆய்வு மையம் சார்பில் துவங்கிய போர்வெல் அமைக்கும் பணி விவசாயிகள் எதிர்ப்பால் நிறுத்தப்பட்டது.சிவகங்கை அருகே சக்கந்தி ஊராட்சி உலகநாதபுரத்தில் உள்ள சின்னக்கண்மாயில் நேற்று காலை மத்திய புவியியல் ஆய்வு மையம் சார்பில் மெகா போர்வெல் போட்டு பூமிக்கடியில் நிலக்கரி உள்ளிட்ட பெட்ரோலியப்பொருட்கள் உள்ளதா என ஆய்வு பணி துவங்கியது. இந்த ஊராட்சிக்குட்பட்ட உலகநாதபுரம், புதுப்பட்டி உள்ளிட்ட கிராம மக்கள் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, போர்வெல் வாகனத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். இருப்பினும் போர்வெல் போட்டு ஆய்வு நடத்தினால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதுடன் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும் என எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து ஆய்வு மைய அதிகாரிகள் பணியை நிறுத்தினர். உரிய அனுமதியுடன் ஆய்வு
புவியியல் ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது: மத்திய அரசின் ஆலோசனையின்படி பூமிக்கடியில் நிலக்கரி உள்ளிட்ட தாதுப்பொருட்கள் உள்ளதா என ஆய்வு செய்ய உரிய அனுமதியுடன் சென்றோம். விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பணியை நிறுத்தி விட்டோம் என்றார். விவசாயிகள் எதிர்ப்பு
சக்கந்தி ஊராட்சி தலைவர் கோமதி கூறியதாவது: ஆறு மாதங்களுக்கு முன் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து பூமிக்கடியில் நிலக்கரி உள்ளிட்ட தாதுப்பொருட்கள் இருப்பது குறித்த ஆய்வு நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தனர்.ஆனால் ஆய்வுக்கு செல்லும் போது உரிய தகவல் தெரிவிக்காமல் போர்வெல் அமைத்தனர். இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பணியை நிறுத்த கூறினோம் என்றார்.