| ADDED : மார் 06, 2024 06:00 AM
திருப்புவனம், : திருப்புவனம் அருகே பிரமனுார் கால்வாயில் தடுப்புச்சுவர் சேதமடைந்த நிலையில் தற்போது புதிதாக சுவர் கட்டும் பணி தொடங்கியுள்ளது.வைகை ஆற்றின் வலது மற்றும் இடது பிரதான கால்வாய் மூலம் கண்மாய்களுக்கு வைகை அணையில் இருந்தும், மழைத்தண்ணீரும் கால்வாய் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. தட்டான்குளம் தடுப்பணையில் இருந்து பிரமனுார் கண்மாய் வரையிலான ஏழு கி.மீ., துாரமுள்ள கால்வாயில் வைகை ஆற்றினுள் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு நவம்பரில் திருப்புவனம் எஸ்.எம்.எஸ்., நகர் அருகே 100 மீட்டர் தூரத்திற்கு தடுப்புச்சுவர் சேதமடைந்ததால் தற்காலிகமாக மணல் கொண்டு அடைக்கப்பட்டு கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. தடுப்புச்சுவரை நிரந்தரமாக அமைக்க வேண்டும் என விவசாயிகளின் கோரிக்கையை அடுத்து நேற்று காலை பொதுப்பணித்துறையினர் புதிய சுவர் கட்டும் பணியை தொடங்கியுள்ளனர்.பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில் :வைகை ஆற்றின் வலது மற்றும் இடது பிரதான கால்வாய் 28 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டு வருகிறது. இதில் 48 இடங்களில் பணிகள் நடந்து வருகின்றன. அதில் பிரமனுார் கால்வாயில் தடுப்புச்சுவர் கட்டும் பணியையும் இணைத்துள்ளோம், நான்கரை மீட்டர் உயரமும், 100 மீட்டர் துாரத்திற்கும் புதிய சுவர் கட்டும் பணி தொடங்கியுள்ளது. திட்ட மதிப்பீடு ஒரு கோடி ருபாய் வரை ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கோடை காலத்தில் கால்வாயில் தண்ணீர் திறப்பு இருக்காது என்பதால் பணிகளை தொடங்கியுள்ளோம், ஒருசில மாதங்களில் பணிகளை நிறைவடைந்து செப்டம்பரில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன் பயன்பாட்டிற்கு வரும், என்றனர்.