| ADDED : ஜன 11, 2024 04:09 AM
சிவகங்கை : சிவகங்கையில் 499 பயனாளிகளுக்கு ரூ.4.31 கோடி மதிப்பில் தாலிக்கு தங்கம், உதவித்தொகை வழங்கப்பட்டது.சிவகங்கை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு முடித்த பெண்களின் திருமணத்திற்கென சமூக நலத்துறை மூலம் திருமண உதவித்தொகை, தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். மானாமதுரை எம்.எல்.ஏ., தமிழரசி, சிவகங்கை ஊராட்சி ஒன்றிய தலைவர் மஞ்சுளா முன்னிலை வகித்தனர். மாவட்ட சமூக நல அலுவலர் ரதிதேவி வரவேற்றார்.விழாவில் பத்தாம் வகுப்பு வரை படித்த 196 பெண்களுக்கு தலா 8 கிராம் தங்கம், ரூ.25 ஆயிரம் வீதம் ரொக்கம் ரூ.49 லட்சம், 1,568 கிராம் தங்கமும், பட்டப்படிப்பு முடித்த 303 பெண்களுக்கு தலா 8 கிராம் வீதம் 2,424 கிராம் தங்கம், தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.1 கோடியே 51 லட்சத்து 50 ஆயிரம் என ஒட்டு மொத்தமாக 3,992 கிராம் தங்கம், ரூ.3 கோடியே 53 லட்சம் என ரூ.4.31 கோடிக்கு தங்கம், உதவி தொகை வழங்கப்பட்டது. சமூக நல விரிவாக்க அலுவலர் சுதந்திரம் நன்றி கூறினார்.