| ADDED : ஏப் 05, 2024 03:00 PM
சிங்கம்புணரி: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே ரோடு வசதி கேட்டு வாக்குவாதம் செய்த கிராமத்தினரை அமைச்சர் பெரியகருப்பனின் ஆதரவாளர்கள் தாக்கினர். சிவகங்கை லோக்சபா தொகுதியில் இண்டியா கூட்டணியில் காங்., சார்பில் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக அமைச்சர் பெரியகருப்பன் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். ஏப். 4ம் தேதி இரவு எஸ்.புதூர் ஒன்றியம் உரத்துப்பட்டியில் ஓட்டு சேகரிக்க வந்த அமைச்சர் பெரியகருப்பனை கிராம மக்கள் சிலர் சூழ்ந்து கொண்டு, உரத்துப்பட்டி - மேலவண்ணாரிருப்பு சாலைப்பணி பல ஆண்டுகளாக பாதியிலேயே நிற்பதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அமைச்சருடன் வந்த சிலர், வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் உள்ளூர் தி.மு.க.,வினர் உள்ளிட்டோர் காயமடைந்தனர். இதனால் அங்கு பதட்டம் நிலவியது. போதிய போலீசார் இல்லாததால் பிரச்சனையை சமாளிக்க முடியவில்லை. கலவரம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இதை தொடர்ந்து காயம்பட்டவர்கள் அதே ஊரைச் சேர்ந்த பா.ஜ.., ஒன்றிய தலைவர் செல்வராஜிடம் சென்று வெளியூர் நபர்கள் உள்ளூர் மக்களை தாக்குவதாக புகார் தெரிவித்தனர். அவர் தி.மு.க., ஒன்றிய செயலாளரின் காரை மறித்து, தாக்குதல் குறித்து கேள்வி எழுப்ப முயன்றார். அவரையும் அமைச்சர் உடன் வந்தவர்கள் விரட்டிச் சென்று தாக்கினர். அங்கிருந்தவர்கள் அவரை வீட்டுக்குள் வைத்து பூட்டினர். ஆனாலும் வீட்டுக்குள் சென்று செல்வராஜ், அவரது மனைவி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இச்சம்பவத்தில் காயமடைந்த உள்ளூர் தி.மு.க., பிரமுகர்கள் அழகப்பன் 35, ராசு 34 மற்றும் பா.ஜ., நிர்வாகி செல்வராஜ் ஆகியோர் பொன்னமராவதி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இதற்கிடையில் கிராமத்தினர் தங்களை தாக்கியதாக கூறி அமைச்சரின் ஆதரவாளர்களான விக்னேஷ் பிரபு, விஸ்வநாதன் ஆகியோரும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து உலகம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.