| ADDED : நவ 28, 2025 08:04 AM
மானாமதுரை: மானாமதுரை புது பஸ் ஸ்டாண்டிற்க்குள் பஸ்கள் உள்ளே செல்லாமல் நான்கு வழிச்சாலையிலேயே பயணிகளை ஏற்றி, இறக்கி செல்வதினால் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு வருவதால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். மானாமதுரை புது பஸ் ஸ்டாண்டிலிருந்து பல்வேறு நகரங்களுக்கும், கிராம பகுதிகளுக்கும் தினந்தோறும் 400க்கும் மேற்பட்ட பஸ்கள் சென்று வருகின்றன. கடந்த வாரம் பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் நுழையும் பகுதியில் அலங்கார நுழைவு வாயில் கட்டுவதற்காக மெகா சைஸ் பள்ளம் தோண்டப்பட்ட நிலையில் கடந்த ஒரு வார காலமாக பஸ்கள் உள்ளே செல்லாமல் மதுரை- - ராமேஸ்வரம் நான்கு வழி சாலை மையத்திலேயே பயணிகளை ஏற்றி, இறக்கி செல்வதினால் தினம்தோறும் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. நேற்று இரவு 7:00 மணிக்கு அடுத்தடுத்து ஏற்பட்ட விபத்தில் 70 வயது மூதாட்டி ஒருவரும் 50 வயது ஆண் பயணி ஒருவரும் பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோன்று கடந்த ஒரு வாரத்திற்குள் மட்டும் 5 பேர் காயமடைந்துள்ளனர். இது குறித்து பயணிகள் கூறியதாவது, மானாமதுரை புது பஸ் ஸ்டாண்டில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத நிலையில் தற்போது அலங்கார நுழைவு வாயில் கட்டுவதற்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளதால் பஸ்கள் உள்ளே செல்லாமல் நான்கு வழிச்சாலையிலேயே பயணிகளை ஏற்றிச் இறக்கி செல்வதினால் தினம்தோறும் விபத்துக்கள் ஏற்பட்டு பலர் படுகாயமடைந்து வருகின்றனர். ஆகவே பஸ்கள் பஸ் ஸ்டாண்டிலிருந்து வெளியே வரும் பாதை வழியாக உள்ளே சென்று பயணிகளை ஏற்றிச் இறக்கி செல்ல வேண்டும் அல்லது பரமக்குடியில் இருந்து வரும் பஸ்கள் வழி விடு முருகன் கோயில் எதிரே உள்ள சர்வீஸ் ரோடு வழியாகவே பஸ் ஸ்டாண்ட் வரை வர வேண்டும், மேலும் போக்குவரத்து அதிகமுள்ள நேரங்களில் டிராபிக் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.