மாவட்டத்தில் தொடரும்
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கொலை,கொள்ளை சம்பவங்கள் நடந்து வருவதால் மக்கள் வெளியே செல்வதற்கே அச்சப்படுவதாக தெரிவிக்கின்றனர். சிவகங்கை அருகே சக்கந்தியில் கடந்த மாதம் நண்பர்களுடன் இன்னிசை நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய மனோஜ்பிரபு 29 என்ற இளைஞரை காரில் வந்த கும்பல் விரட்டி வெட்டி கொலை செய்தது. கடந்த ஏப்.27 சாமியார்பட்டி தி.மு.க., பிரமுகர் பிரவீன்குமாரை 27 அவரது தோட்டத்தில் வைத்து ஒரு கும்பல் கொலை செய்தது. இதற்கு பழி தீர்க்கும் விதமாக ஆக.2 தேவகோட்டை அருகே விளங்காட்டூரில் விவசாயி கருப்பையா என்ற முதியவரை ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தது. ஜூலை 20 நாட்டாகுடியில் விவசாயி சோனைமுத்துவை 65 தலையை துண்டித்து கொலை செய்தனர். இதில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டாலும் இந்த கொலைக்கு கூலி படையாக செயல்பட்டவர்கள் கைது செய்யப்படவில்லை என புகார் உள்ளது. காரைக்குடியில் கடந்த ஜூலையில் மட்டும் 10க்கும் மேற்பட்ட வீடுகளை பூட்டை உடைத்து திருட்டு சம்பவம் நடந்துள்ளது. மாவட்டத்தில் தொடர்ச்சியாக கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருவதால் மக்கள் பொதுவெளியில் நடந்து செல்லவே அச்சப்படுவதாக தெரிவிக் கின்றனர்.