சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் நடக்கும் எஸ்.ஐ.ஆர்., பணியின் மீது சந்தேகம் எழுந்துள்ளதால் அ.தி.மு.க., -தி.மு.க.,வினர் இடையே மோதல் போக்கு உருவாகி வருகிறது. கலெக்டர் தான் உண்மை தன்மையை வெளிப்படுத்த வேண்டும் என சர்வ கட்சியினர் வலியுறுத்துகின்றனர். இறந்தவர்கள் ஓட்டு, இடம் பெயர்ந்தவர்கள், இரட்டை ஓட்டு பதிவு உள்ள வாக்காளர்களை நீக்கி வாக்காளர் பட்டியலை சீர்திருத்தும் எஸ்.ஐ.ஆர்., பணியை தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட சிவகங்கை, மானாமதுரை (தனி), காரைக்குடி, திருப்புத்துார் ஆகிய 4 தொகுதிகளில் உள்ள 12 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களின் உண்மை தன்மையை அறிய அனைத்து ஓட்டுச்சாவடி அலுவலர்கள் மூலம் வாக்காளர்களுக்கு எஸ்.ஐ.ஆர்., படிவம் வழங்கப்பட்டு, பூர்த்தி செய்த படிவங்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர். ஆளுங்கட்சி மீது அ.தி.மு.க., புகார் நவ., 29 முதல் டிச., 2ம் தேதி வரை இம்மாவட்டத்தில் இரட்டை பதிவு வாக்காளர்கள் மற்றும் இடம் பெயர்ந்து சென்றவர்களை நீக்காமல் விண்ணப்பத்தில் போலியாக கையெழுத்திட்டு தி.மு.க., ஓட்டுச்சாவடி ஏஜன்ட்களின் அழுத்தத்துடன் ஓட்டுச்சாவடி அலுவலர் பதிவேற்றம் செய்துள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர், தொகுதி தேர்தல் அலுவலர்களிடம் அ.தி.மு.க., புகார் செய்துள்ளது. அ.தி.மு.க., மாவட்ட செயலாளரும், சிவகங்கை எம்.எல்.ஏ.,வுமான செந்தில்நாதன் அளித்த புகாரில் போலியான கையெழுத்திட்டு வாக்காளர்களை பதிவேற்றம் செய்ததற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அ.தி.மு.க., - தி.மு.க., மோதல் போக்கு எஸ்.ஐ.ஆர்., பணியில் ஆளுங்கட்சி பூத் ஏஜன்ட்கள் முறைகேடாக பதிவேற்றம் செய்வதாக அ.தி.மு.க., புகார் குறித்து, தி.மு.க., மாவட்ட செயலாளரும், அமைச்சருமான பெரியகருப்பனிடம் கேட்ட போது, அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் பொய் புகார் அளிக்கிறார் என தெரிவித்தார். இதையடுத்து சட்டசபை தேர்தலுக்கு முன்பாகவே சிவகங்கை மாவட்டத்தில் அ.தி.மு.க.,- தி.மு.க., இடையே மோதல் போக்கு உருவாகி வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் நிகழ்ந்து வரும் எஸ்.ஐ.ஆர்., பணியில் உண்மை தன்மை இருக்கிறதா, இல்லையா என்பதை கட்சியினர், வாக்காளர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய கடமை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பொற்கொடிக்கு தான் உள்ளதென சர்வ கட்சியினர் தெரிவிக்கின்றனர்.