| ADDED : மே 24, 2024 03:58 AM
தென்காசி : குற்றால அருவிகளில் சுற்றுலா பயணியர் இன்று முதல் குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.பழைய குற்றால அருவியில் கடந்த 17ம் தேதி ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிறுவன் அஸ்வின், 17, இழுத்து செல்லப்பட்டு இறந்தார். இதையடுத்து அருவிகளில் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டது. தென்காசி கலெக்டர் கமல் கிஷோர், எஸ்.பி .சுரேஷ்குமார் ஆகியோர் நேற்று அருவிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.மெயின் அருவி உள்ளிட்டவற்றில் இன்று மாலை 4:00 மணி முதல், பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர். பழைய குற்றாலத்தில் மட்டும் காலை 6:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை மட்டுமே குளிக்க அனுமதிக்கப்படுவர். அருவிகளில் சோப்பு, ஷாம்பு, எண்ணெய் பயன்படுத்த அனுமதி இல்லை. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கொண்டு செல்லக்கூடாது. குடிபோதையில் செல்ல அனுமதி இல்லை போன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.வெள்ள முன்னெச்சரிக்கைக்காக வனத்துறையினர் வனப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபடுவர். பழைய குற்றாலத்தில் வெள்ள கண்காணிப்புக்காக சென்சார் கருவிகள் அமைப்பது குறித்து அண்ணா பல்கலை குழுவினர் நேற்று அருவி பகுதிகளில் பார்வையிட்டனர்.