உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / கும்பகோணம் மாநகராட்சியிலும் குஸ்தி மேயருக்கு எதிராக தி.மு.க., மல்லுக்கட்டு

கும்பகோணம் மாநகராட்சியிலும் குஸ்தி மேயருக்கு எதிராக தி.மு.க., மல்லுக்கட்டு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சி மேயராக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சரவணன் இருக்கிறார்; ஆட்டோ டிரைவாக இருந்து மேயரானவர். கூட்டணி கட்சியைச் சேர்ந்த தி.மு.க., கவுன்சிலர்களுக்கு, சரவணன் மேயராக தேர்வு செய்யப்பட்டது பிடிக்கவில்லை. இதனால், சரவணன் மேயர் ஆனது முதல், தி.மு.க., கவுன்சிலர்கள் அவருடன் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மேயர் கூட்டும் முக்கியமான மாநகராட்சி கூட்டத்துக்கு வராமல், தி.மு.க., கவுன்சிலர்கள் புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதனால், மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் பாதிக்கும் என, மாநகராட்சி அதிகாரிகளும், பிற கட்சிகளின் கவுன்சிலர்களும் கூறுகின்றனர். அவர்கள் கூறியதாவது: துணை மேயராக உள்ள தி.மு.க.,வைச் சேர்ந்த தமிழழகன், தனக்கு மேயர் பதவி கிடைக்காததற்கு சரவணன் தான் காரணம் என எண்ணுகிறார். இதையடுத்து, தனக்கு சாதகமாக இருக்கும் தி.மு.க., கவுன்சிலர்களுடன் இணைந்து, தனி கோஷ்டியாக செயல்படுகிறார்; சரவணனுக்கு தொடர்ந்து இடைஞ்சல் கொடுத்து வருகிறார். இதற்கு, மற்ற தி.மு.க., கவுன்சிலர்களும் உடந்தையாக உள்ளனர். இது குறித்து, தி.மு.க., தலைமை பல முறை எச்சரித்தது. ஆனாலும், மேயருடன் தி.மு.க., கவுன்சிலர்கள் தொடர்ந்து மோதல் போக்கிலேயே உள்ளனர். மேயர் சரவணன் கடந்த 8ல், கும்பகோணம் மாநகராட்சிக்கான வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தினார்; அக்கூட்டத்துக்கு வருமாறு முன்கூட்டியே அனைத்து கவுன்சிலர்களுக்கும் கடிதம் அனுப்பி இருந்தார். அதன்படி, நேற்று காலை 11:00 மணிக்கு, மாநகராட்சி கூட்ட அரங்கிற்கு வந்தார் மேயர். அப்போது, அ.தி.மு.க., கவுன்சிலர்களான பத்ம குமரேசன், ஆதிலட்சுமி, கவுசல்யா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ., கவுன்சிலர் செல்வம் ஆகிய நான்கு பேர் மட்டுமே இருந்தனர்.மற்ற கவுன்சிலர்கள் வருகைக்காக, மேயர் மற்றும் கவுன்சிலர்கள் ஐந்து பேர் மட்டும் காத்திருந்தனர். ஆனால், வெகு நேரம் ஆகியும் துணை மேயர் தமிழழகன் உள்ளிட்ட தி.மு.க., கவுன்சிலர்கள் 38 பேரும் வரவில்லை. இதில், காங்., கட்சியின் இன்னொரு கவுன்சிலர் அய்யப்பனும் ஒருவர். இதனால் இருப்போரை மட்டும் வைத்து, கூட்டத்தை நடத்தி முடித்தார் சரவணன். ஏற்கனவே திருநெல்வேலி மற்றும் கோவை மாநகராட்சி மேயர்கள் மாற்றப்பட்டிருக்கும் நிலையில், கும்பகோணம் மேயர் சரவணனுக்கு தொடர் நெருக்கடி கொடுப்பதன் வாயிலாக, அவர் பதவி விலகி விடுவார்; அதை வைத்து, தி.மு.க.,வைச் சேர்ந்த தமிழழகன், தான் மேயராகி விடலாம் என நினைக்கிறார். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை