தஞ்சாவூர்:துாத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில், கடந்த ஆண்டு டிசம்பர் 17ல் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், உணவு, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள், பல நாட்கள் அவதியடைந்தனர். தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியைச் சேர்ந்த, உணவகம் நடத்தி வரும் சரவணகுமார், 53, மற்றும் பழக்கடை நடத்தி வரும் ஜெய்னுலாபுதீன், 58, இருவரும், தங்கள் குடும்பத்தினருடன் துாத்துக்குடிக்கு சென்று, இரண்டு நாட்கள் தங்கி, உணவுகளை சமைத்து, 12,000 பேருக்கு வழங்கினர்.இதையறிந்த தஞ்சாவூர் கலெக்டர் தீபக் ஜேக்கப், இருவரின் சேவையை பாராட்டி, நேற்று நடந்த குடியரசு தின விழாவில், இருவருக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.இதுகுறித்து சரவணகுமார், ஜெய்னுலாபுதீன் கூறியதாவது:நாங்கள் இருவரும் மதங்களை கடந்து, வள்ளலார் வழியில் பசிப்பிணியை எங்களால் முடிந்தவரை போக்கி வருகிறோம். இயற்கை பேரிடர் எங்களை நண்பர்களாகியது.சுனாமி, கஜா புயல் நேரங்களில், நாகை மாவட்டத்தில், நான்கு நாட்கள் தங்கி தேவைப்படுவோருக்கு உணவு சமைத்து வழங்கினோம். கொரோனா நேரத்திலும், நாளொன்றுக்கு 100 பேருக்கு ஒரு மாதம் உணவு வழங்கினோம்.துாத்துக்குடியில், எங்களது குடும்பத்தினரோடு உணவு சமைத்து, அங்கு 12,000 பேருக்கு வழங்கினோம். எங்களுடன், எங்கள் ஊரைச் சேர்ந்த 18 பேரும் வந்து இருந்தனர்.எங்களது சேமிப்பு தொகை 1.10 லட்சம் ரூபாய், நண்பர்கள் வழங்கிய 10,000 ரூபாய் என, 1.20 லட்சம் ரூபாயை செலவு செய்தோம்.செலவு செய்யும் தொகை பெரிதல்ல, பசித்தோருக்கு உரிய நேரத்தில் உணவு வழங்குவதே எங்களது நோக்கம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.