| ADDED : ஜூலை 14, 2024 04:23 AM
போடி : தேனி மாவட்டம், போடி அணைக்கரைப்பட்டியில் ஒரே நாளில் 13 மாணவர்களுக்கு வைரஸ் காய்ச்சலிலும் இருவர் அம்மை நோயால் பாதிக்கப்ட்டுள்ளனர்.போடி ஒன்றியம், அணைக்கரைப்பட்டியில் அரசு கள்ளர் துவக்கப்பள்ளியில் படிக்கும் 11 மாணவர்களுக்கும்,உயர்நிலைப்பள்ளி, அங்கன்வாடி மையத்தில் படிக்கும் இருவர் என 13 பேர் ஒரே நாளில் காய்ச்சல் பாதித்து பள்ளிக்கு வரவில்லை. மீனாட்சிபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தினர் ஆய்வில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் 13 மாணவர்கள் பாதித்தது தெரிந்தது. இதில் அணைக்கரைப்பட்டி கீழத்தெருவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அகில் 6, அஸ்வின் 5,மாணவர்களுக்கு காய்ச்சல், பொன்னுக்கு வீங்கி அம்மையால் பாதித்துள்ளனர். இருவரையும் தீவிர சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனர். மற்ற மாணவர்களுக்கு சுகாதாரத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.டொம்புச்சேரி வட்டார மருத்துவ அலுவலர் தண்டபாணி தலைமையில், டாக்டர் வினோத், சுகாதாரத்துறை வட்டார மேற்பார்வையாளர் முரளி, ஆய்வாளர் வெங்கடேச பெருமாள் ஆகியோர் தலைமையில் மருத்துவ முகாம் அமைத்துள்ளனர்.ஊராட்சி குடிநீர் மேல்நிலைத் தொட்டி குளோரினேசன் செய்யப்பட்டது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகிக்க ஊராட்சி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினர். மேலும் காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில் நிலவேம்பு கஷாயம், மாத்திரைகள் உள்ளிட்ட சிகிச்சை அளிக்கப்பட்டன.மக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்குமாறு சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தினர்.