| ADDED : ஆக 08, 2024 05:34 AM
கூடலுார்: குமுளியில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி அமைக்காததால் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு மதுபாட்டில்கள், போதை பொருட்கள், ரேஷன் அரிசி கடத்தல் அதிகரித்துள்ளது.தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ளது குமுளி. எல்லைப் பகுதியை இணைக்கும் முக்கிய வழித்தடமாக இருப்பதால் வாகன போக்குவரத்து அதிகம். இங்குள்ள கேரள பகுதியில் போலீஸ், கலால்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட துறைகள் ஒருங்கிணைந்து ஒரே இடத்தில் சோதனை சாவடி அமைத்துள்ளது. அதேவேளையில் தமிழகப் பகுதியில் வனத்துறை சோதனைச் சாவடி மட்டும் உள்ளது. போலீசார் தனியாக எல்லையை ஒட்டி புறக் காவல் நிலையம் அமைத்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு குமுளி மலைப் பாதையில் இருந்த வருவாய்த் துறை சோதனைச் சாவடி அகற்றப்பட்டது. தனித்தனியாக சோதனைச் சாவடிகள் இருந்தபோதிலும் முழுமையாக அனைத்து வாகனங்களையும் சோதனைக்கு உட்படுத்தப்படுவதில்லை. பெயரளவில் ஆலோசனைக் கூட்டம்
அவ்வப்போது இரு மாநில போலீசார்களும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து தீவிர சோதனையில் ஈடுபட வேண்டுமென ஆலோசனை கூட்டம் நடத்துவது வழக்கம். ஆனால் தமிழகப் பகுதியில் எவ்வித சோதனையும் கடுமையாக்கப்படுவதில்லை. இதனால் மதுபாட்டில், போதை பொருட்கள், ரேஷன் அரிசி கடத்தல் அதிக அளவில் நடந்து வருகிறது.மூன்றாண்டுகளுக்கு முன்பு லோயர்கேம்பில் ஒருங்கிணைந்த சோதனை சாவடி அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. பின்பு அது கிடப்பில் போடப்பட்டது.தமிழகத்தில் இருந்து கடத்திச் செல்லும் மது பாட்டில்கள் அதிகமாக கேரளாவில் கைப்பற்றப்படுகிறது. தமிழக பகுதியில் அனைத்து துறைகளும் இணைந்து ஒரே இடத்தில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி அமைத்து சோதனையை தீவிர படுத்தினால் மட்டுமே கடத்தலை முழுமையாக தடுக்க முடியும்.