உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / குமுளி மலைப்பாதையில் செல்லும் அதிவேக ஜீப்புகளால் தொடரும் விபத்து

குமுளி மலைப்பாதையில் செல்லும் அதிவேக ஜீப்புகளால் தொடரும் விபத்து

லோயர்கேம்பில் இருந்து குமுளி வரையுள்ள 6 கி.மீ., தூர மலைப்பாதை பல ஆபத்தான வளைவுகளைக் கொண்டதாகும். வழிவிடும் முருகன் கோயில் வளைவு, கொண்டை ஊசி வளைவு, மாதா கோயில் வளைவு, இரைச்சல் பாலம் வளைவு ஆகியவைகள் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படக்கூடிய பகுதியாகும். தமிழக கேரள எல்லையாக இருப்பதால் வாகன போக்குவரத்தும் அதிகம்.இடுக்கி மாவட்டத்தில் ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் ஏலத்தோட்டம் உள்ளது. இதில் அதிகமாக தமிழகப் பகுதியில் உள்ள கூடலுார், கம்பம், காமயகவுண்டன்பட்டி, போடி உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு சொந்தமானதாகும். தினந்தோறும் ஏலத் தோட்ட பணிகளுக்காக இப்பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான ஜீப்புகளில் தொழிலாளர்களை ஏற்றிச் சென்று பணி முடிந்த பின் மாலையில் திரும்பி வருவது வழக்கம். இவ்வாறு செல்லும் ஜீப்புகள் அதிவேகமாக இயக்கப்படுகிறது என பொதுமக்கள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர். இருந்த போதிலும் அதிகாரிகள் இதை கண்டு கொள்வதே இல்லை. பெயரளவிற்கு அவ்வப்போது போலீசாரும் போக்குவரத்து துறை அதிகாரிகளும் சிறிய தொகையில் அபராதம் விதித்து தொடர்ந்து கண்காணிப்பதில்லை.அதிகாலை மற்றும் மாலையில் தொடர்ந்து ஜீப்புகள் வேகமாக வரும் போது எதிரே வரும் வாகனங்கள் அச்சத்துடன் கடந்து செல்ல வேண்டியுள்ளது. விபத்து ஏற்படும் போது 100 அடியில் இருந்து 500 அடி வரையில் உள்ள பள்ளத்தில் கவிழும் அபாயம் உள்ளது. கடந்த சில மாதங்களாக தொடர்ந்து விபத்துக்கள் நடந்த வண்ணம் உள்ளது.நேற்று அதிகாலையில் தோட்டத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற ஜீப் மாதா கோயில் வளைவு அருகே எதிரே வந்த மினி லாரி மீது மோதியது. இதில் லாரி மற்றும் ஜீப் சேதமடைந்தது. பள்ளத்தில் கவிழாமல் இருந்ததால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. அதிவேகமாக செல்வதே இந்த விபத்திற்கு காரணம்.இதுபோன்ற தொடர் விபத்துகளால் மலைப்பாதையில் டூவீலர்கள் செல்பவர்கள் அச்சமடைந்துள்ளனர். தோட்டத் தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் அனைத்து ஜீப்புகளுக்கும் வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்த கட்டாயமாக்குவதுடன், வேகமாக சென்று விபத்து ஏற்படுத்தும் ஜீப் டிரைவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும், என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை