| ADDED : ஜூலை 26, 2024 12:17 AM
தேனி : அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் 'அம்மா' உணவகம் 3 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது. இதனால் நோயாளிகள், பார்வையாளர்கள் ஓட்டல்களில் கூடுதல் விலை கொடுத்து வாங்கி சிரமம் அடைகின்றனர்.தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் 2016ல் அம்மா உணவகம் துவங்கப்பட்டது. இதனை ஆண்டிப்பட்டி ஒன்றியம் சார்பில் பராமரிக்கப்பட்டு வந்தது.இந்த உணவகம் மூலம் ஏராளமான நோயாளிகள், உடன் வரும் உதவியாளர்கள் குறைந்த விலையில் சாப்பிட்டனர். நிதி பிரச்னையால் ஒன்றிய நிர்வாகம் சில ஆண்டுகளுக்கு முன் 'அம்மா' உணவகத்தை பராமரிப்பதை நிறுத்தினர். அங்கு பணியாற்றும் ஊழியர்கள் முயற்சியால் சில மாதங்கள் செயல்படுத்தினர். அவர்களாலும் தொடர முடியாததால் 2021ல் முழுமையாக மூடப்பட்டது. தற்போது சிகிச்சைக்கு வரும் ஏழை, எளிய நோயாளிகள் கூடுதல் பணம் செலவு செய்து ரோட்டோர கடைகளில் சுகாதாரமற்ற உணவுகளை வாங்கி உண்ணும் நிலை உள்ளது. பொதுமக்கள் உணவிற்காக தினமும் கூடுதல் பணம் செலவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இப் பிரச்னைக்கு தீர்வாக அம்மா உணவகத்தை மருத்துவக்கல்லுாரி நிர்வாகம் ஏற்று நடத்தினால் தொடர்ந்து செயல்படும். ஏராளமான பொதுமக்கள் குறைந்த விலையில் பசியாறுவார்கள் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். மருத்துவம் இலவசம் உணவிற்கு ரூ. 200 செலவு
பாலன், வருஷநாடு:சில ஆண்டுகளுக்கு முன் உடல் நலம் பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அம்மா உணவகத்தில் மனைவி, உறவினர்கள் குறைந்த செலவில் சாப்பிட்டனர். காலை, மதிய வேளையும் ரூ. 20க்குள் முடிந்து விடும். தற்போது மதிய உணவிற்கு ரூ.80, காலை உணவிற்கு ரூ.50 வரை செலவாகிறது.உணவகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் அனைவருக்கும் உதவியாக இருக்கும். இங்கு குடிநீர் இலவசமாக கிடைக்கும். தற்போது பணம் கொடுத்து குடிநீர் வாங்கும் நிலை உள்ளது. இதனால் மருத்துவம் இலவசம் என்றாலும் உணவு, குடிநீருக்காக தினமும் ரூ.200 வரை செலவு செய்ய வேண்டி உள்ளது என்றார்.