| ADDED : ஜூலை 04, 2024 01:56 AM
கம்பம்: தேனி மாவட்டத்தில் டீன் ஏஜ் திருமணத்தை கட்டுக்குள் கொண்டு வர திருமண வயது 21 என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம் செய்ய குடும்ப நலத்துறை முடிவு செய்துள்ளது.மாவட்டத்தில் சமீபத்தில் நடத்திய கணக்கெடுப்பில் 20 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் 200 பேர்களுக்கு மேல் திருமணம் செய்துள்ளனர். இதில் 30 பேர்களுக்கு மேல் கருச்சிதைவு ஆகி உள்ளது . அது தானாக நடந்ததா அல்லது அவர்களாக கருக்கலைப்பு செய்தனரா என்பது தெரியவில்லை. எனவே திருமண வயது 21 என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரங்கள் முன்னெடுக்க குடும்பநலத்துறை முடிவு செய்துள்ளது.ஆனால் அதற்கான விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்ளவும், அதில் தன்னார்வலர்கள், பொது நல அமைப்புக்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், மாணவ, மாணவிகள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம செவிலியர்கள் உள்ளிட்டோரை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக குடும்ப நலத்துறை வட்டாரங்கள் கூறியுள்ளன.