| ADDED : மே 17, 2024 06:54 AM
மூணாறு : தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்புகளின் பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும் என தொழிலாளர் நலத்துறை ஆணையர் அர்ஜூன்பாண்டியன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது., தோட்டத் தொழிலாளர் உரிமைகளின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் தோட்ட பகுதிகளில் தீவிர ஆய்வு நடத்த வேண்டும். தொழிலாளர்கள் குடியிருப்புகளின் பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் உறுதி செய்ய வேண்டும். குடியிருப்புகளின் நிலை, குடிநீர், ரோடு, மருத்துவம், அங்கன்வாடி, சமுதாய கூடம் ஆகிய அடிப்படை வசதிகளின் உள் கட்டமைப்புகளை ஆய்வு செய்ய வேண்டும். தோட்டப் பகுதிகளில் குறிப்பிட்ட கால இடைவெளியில் தோட்ட ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தியும், தொழிலாளர்களை நேரில் சந்தித்து குறைந்தபட்ச ஊதியம், அணுகுமுறை, உரிய விடுமுறை பிற சலுகைகள் கிடைப்பதை உறுதி படுத்த வேண்டும்.அதில் சட்ட மீறல்கள் இருந்தால் தோட்ட நிர்வாகத்தினரின் கவனத்திற்கு கொண்டு சென்று தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பான அறிக்கையை மாதம்தோறும் 5ம் தேதிக்கு முன்பாக தோட்ட தலைமை ஆய்வாளர், தொழிலாளர் நலத்துறை ஆணையரிடம் தாக்கல் செய்ய வேண்டும்.மழைகாலம் நெருங்குவதால் குடியிருப்புகளை ஆய்வு செய்து தோட்ட நிர்வாகத்தின் மூலம் பராமரிப்பு பணிகள் செய்ய வேண்டும்.சுகாதார நடவடிக்கைகள் குறைபாடு இன்றி நடப்பதை உறுதி செய்ய வேண்டும். ஆய்வில் கண்டறியப்படும் தொழில் சட்ட மீறல் தொடர்பான தீர்வுக்கு காலக்கெடு, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் உள்பட அனைத்தையும் தோட்ட நிர்வாகத்தினரிடம் தெரிவித்து அதற்கான பேச்சு வார்த்தைக்கு முன் கூட்டியே தேதி நிச்சயித்து பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும், என கூறியுள்ளார்.