| ADDED : ஜூன் 22, 2024 05:42 AM
ஆண்டிபட்டி பகுதியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் விவசாயத்துடன் கால்நடை வளர்ப்பை உப தொழிலாக கொண்டுள்ளனர். கால்நடை வளர்ப்பில் ஆடுகள் மூலம் விவசாயிகளுக்கு கணிசமான வருவாய் கிடைத்து வருகிறது. விவசாயத்தில் வருவாய் குறைந்தாலும் ஆடுகள் வளர்ப்பு மூலம் கிடைக்கும் வருவாய் அதனை ஈடுசெய்கிறது. இதனால் ஆடு வளர்ப்பை சில கிராமங்களில் முழு நேர தொழிலாகவும் மேற்கொண்டு வருகின்றனர். ஆண்டு முழுவதும் ஆடுகளுக்கான தேவை அதிகம் இருந்தாலும் பங்குனி, சித்திரையில் வரும் கிராம பொங்கல் விழாக்கள், ஆடி, தீபாவளி, தைப்பொங்கல் ஆகிய பண்டிகை காலங்களில் ஆடுகளுக்கான தேவை பல மடங்கு அதிகமாகும். வெளியூரிலிருந்து வரும் வியாபாரிகள் ஆண்டிபட்டி பகுதி கிராமங்களில் முகாமிட்டு ஆடு வளர்ப்பவர்களிடம் முன் பணம் கொடுத்து தேவைப்படும்போது வாங்கிச் செல்லும் நிலை உள்ளது. ஆடு விற்பனையில் உடனடி பணம் கிடைப்பதால் விவசாயிகளிடம் ஆர்வம் அதிகரித்துள்ளது.ஆண்டிபட்டி பகுதியில் ஆடு வளர்ப்பவர்கள் கூறியதாவது: ஆண்டிபட்டி பகுதியில் புள்ளிமான்கோம்பை, புதூர், குண்டலப்பட்டி, மூனாண்டிபட்டி, தர்மத்துப்பட்டி, அணைக்கரைப்பட்டி, ஏத்தக்கோவில், போதாசன்பட்டி, மறவபட்டி, பாலக்கோம்பை, ராயவேலூர், தெப்பம்பட்டி, கன்னியப்பபிள்ளைபட்டி, வருஷநாடு, மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு ஆகிய கிராமங்கள் மேற்கு தொடர்ச்சி மலையை சார்ந்துள்ளன. இக்கிராமங்களில் வளர்க்கப்படும் வெள்ளாடுகள், செம்மறி ஆடுகளை அன்றாடம் காலையில் மேச்சலுக்கு ஓட்டிச்சென்று, மாலையில் ஆடுகளை கொட்டத்தில் அடைத்து விடுவர். கடந்த சில மாதங்களில் பெய்த மழையால் தற்போது மேச்சல் நிலங்கள் பசுமை தீவனம் அதிகம் வளர்ந்துள்ளன. மேய்ச்சல் நிலங்களுக்குச் செல்லும் ஆடுகளுக்கான தண்ணீர் தேவையும் பூர்த்தி அடைந்துள்ளதால் ஆடுகள் வளர்ப்பில் சிரமங்கள் குறைந்துள்ளது. கோடை முடிந்துள்ளதால் வரும் காலங்களில் தீவன பற்றாக்குறைக்கு வாய்ப்பு இல்லை. மேச்சலுக்கு சென்று வரும் ஆடுகளுக்கு எப்போதும் கூடுதல் விலையும் கிடைக்கும். ஆடுகளுக்கான விலை தற்போது கிலோ ரூ.500 முதல் ரூ.600 வரை விலை நிர்ணயம் இருப்பதால் ஆடுகள் வளர்ப்பில் கிடைக்கும் லாபம் மகிழ்ச்சி ஏற்படுத்துகிறது என்றனர்.