| ADDED : ஜூலை 14, 2024 04:22 AM
மூணாறு, : கொட்டாரக்கரை, திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வண்டிபெரியாறு மஞ்சுமலை வி.ஏ.ஓ. அலுவலகம் அருகே மரம் முறிந்து விழுந்து மூன்று மாணவர்கள் உள்பட ஐந்து பேர் பலத்த காயம் அடைந்தனர்.இடுக்கி மாவட்டத்தில் தென் மேற்கு பருவ மழை பெய்து வரும் நிலையில் வண்டிபெரியாறு பகுதியில் பெய்த மழையால் கொட்டாரக்கரை, திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வண்டிபெரியாறு மஞ்சுமலை வி.ஏ.ஓ. அலுவலகம் அருகே நேற்று முன்தினம் மாலை திடிரென மரம் முறிந்து விழுந்தது. அப்போது பள்ளி முடிந்து மாணவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். மரம் முறிந்து விழுந்ததில் வண்டிபெரியாறு மேல்நிலை பள்ளி மாணவர்கள் கோகுல் 17, ஹரிபிரசாத் 16, கெய்ஸ் 16, மற்றும் டூவீலரில் பயணித்த வண்டிபெரியாறைச் சேர்ந்த சுனில் 25, சத்தியபாலன் 27, ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். அப்பகுதியில் நிறுத்தி இருந்த ஆட்டோ, இரண்டு டூவீலர்கள் ஆகியவை சேதமடைந்தன. வண்டி பெரியாறு, பீர்மேடு ஆகிய மருத்துவமனைகளில் காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக அனுமதித்தனர்.இதனைத் தொடர்ந்து வண்டிபெரியாறு போலீசார், தீயணைப்பு துறையினர் இணைந்து அந்த மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.