| ADDED : ஜூன் 29, 2024 04:58 AM
பெரியகுளம் : பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தில் இறைச்சி கடை நடத்துவதில் ஏற்பட்ட தொழில் போட்டியில் சையதுமுகமதுவை கையால் அடித்து கொலை செய்த ஜாபார்சாதிக், அவரை தூண்டிய அக்கீம் இருவருக்கும் தலா 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கூடுதல் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.பெரியகுளம் அருகே தாமரைக்குளம் தாசில்தார் நகரைச் சேர்ந்தவர் சையது முகமது 40. இதே ஊரில் கோழி இறைச்சி கடை நடத்தினார். அதே பகுதியில் பெரியகுளம் தென்கரை பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த அக்கீம் 57. ஆட்டிறைச்சி கடை நடத்தினார். இந்நிலையில் 2020 நவ.14ல் தீபாவளி பண்டிகைக்காக சையதுமுகமது, கோழி இறைச்சி கடையில் கூடுதலாக ஆட்டிறைச்சி கடை போட்டுள்ளார். இதனால் சையதுமுகமதுவுக்கும், அக்கீமிற்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் பெரியகுளம் மார்க்கெட்டில் சையதுமுகமது மாமனார் சுலைமான் என்பவரை நவ.15ல் அக்கீம், இவரது கடையில் வேலை செய்யும் உறவினர் ஜாபர்சாதிக் 35. இருவரும் சுலைமானை அடித்துள்ளனர். இது குறித்து சையதுமுகமது, அக்கீமிடம் கேட்டுள்ளார்.தென்கரை வாகம்புளி புறவீதியில் அக்கீம் தூண்டுதலில் ஜாபர்சாதிக், சையது முகமதுவை நெஞ்சு, தலையில் அடித்து காயப்படுத்தினார். பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு சையது முகமது கொண்டு செல்லப்பட்டு அங்கு இறந்தார். தென்கரை போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து, ஜாபர்சாதிக், அக்கீமை கைது செய்தனர்.இந்த வழக்கு பெரியகுளம் கூடுதல் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்தது. இவ் வழக்கில் விசாரணை முடிந்து ஜாபர்சாதிக், அக்கீமிற்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், பணம் கட்ட தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை வழங்கி நீதிபதி சமீனா தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் சிவக்குமார் ஆஜராகினார்.