| ADDED : ஜூன் 30, 2024 05:14 AM
போடி : போடியில் அரசுக்கு சொந்தமான இடங்கள் இருந்தும் தோட்டக்கலை துறையின் உரம், விதை உள்ளிட்ட இடுபொருட்கள் வைக்க இட வசதி இன்றி பல ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் குடோன் இயங்குகிறது. இதனால் அரசுக்கு ரூ. பல ஆயிரம் நிதி இழப்பு ஏற்பட்டு வருகிறது.போடி நகர் மற்றும் ஒன்றியத்திற்கு உட்பட்ட குரங்கணி, கொட்டகுடி, சில்லமரத்துப்பட்டி. சிலமலை, ராசிங்கபுரம் உள்ளிட்ட 15 ஊராட்சிகயை சேர்ந்த விவசாயிகள் போடி தோட்டக்கலை துறை மூலம் பயன் அடைந்து வருகின்றனர்.இங்கு வாழை, மிளகாய், காய்கறி, மா, நெல்லியும், மானாவாரி பகுதியை அபிவிருத்தி செய்யும் வகையில் சம்பங்கி, மல்லி, கனகாம்பரம் உள்ளிட்ட பூ செடிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.இவர்களுக்கு தேவையான உரம், விதைகள், வேளாண் இடுபொருள்கள் வைப்பதற்கு தோட்டக்கலை துறை அலுவலகத்திற்கு சொந்தமான குடோன் வசதி இல்லை. இதனால் தனியாருக்கு சொந்தமான வாடகை கட்டத்தில் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தனர். வாடகையும் உயர்த்தப்பட்டுள்ளது.தோட்டக்கலைத்துறை அலுவலகம் அமைந்துள்ள இடத்தில் இருந்து ஒரு கி.மீ., தூரம் புதூரில் உள்ள தொடக்க கூட்டுறவு வங்கிக்கான சொந்தமான இடத்தில் வாடகை கட்டடத்தில் தற்போது இயங்கி வருகிறது.வாடகை கட்டடத்தில் இயங்குவதால் ஆண்டுக்கு ரூ. பல ஆயிரம் நிதிஇழப்பு ஏற்படுகிறது.விவசாயத்திற்கு தேவையான இடுபொருள்கள் பெற அலுவலகம் அமைந்துள்ள இடத்தில் இருந்து ஒரு கி.மீ.,தூரம் உள்ள புதுாருக்கு சென்று இடு பொருட்களை பார்க்கவும்,உரம், விதைகள் பெற விவசாயிகள் ஆட்டோவில் செல்ல வேண்டியுள்ளது. நேரம் வீணாவதோடு, ரூ.100 வரை செலவாகிறது.நிரந்தர தீர்வு ஏற்படும் வகையில் போடியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் தோட்டகலைத்துறை அலுவலகம், குடோன் வசதி ஏற்படுத்தி தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.