| ADDED : ஜூலை 05, 2024 05:28 AM
உத்தமபாளையம்: உத்தமபாளையத்தில் முல்லைப்பெரியாற்றின் மையப் பகுதியில் மரம், செடி கொடிகள் புதராக வளர்ந்து தண்ணீர் செல்வதற்கு தடையாக உள்ளது.தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களின் குடிநீர்,பாசனத்திற்கு பயன்படும் முல்லைப்பெரியாறு லோயர்கேம்பில் ஆரம்பித்து கம்பம், தேனி வழியாக வைகை அணையை அடைந்து ராமநாதாபுரம் அருகே கடலில் கலக்கிறது. லோயர்கேம்பில் துவங்கி தேனி வரை ஆற்றின் இரு பக்கமும் ஆக்கிரமிப்பில் சிக்கி சுருங்கி வருகிறது. இதற்கிடையே உத்தமபாளையம் பெரியாற்று பாலம் பகுதியில், முல்லைப் பெரியாற்றின் மையப் பகுதியில் மரங்களும், செடி கொடிகளும் வளர்ந்து புதர் காடாக மாறி உள்ளது. இதனால் ஆற்றில் வரும் தண்ணீர் தொடர்ந்து செல்ல முடியாத நிலை உள்ளது. இரண்டு பிரிவாக பிரிந்து, ஒரு பகுதி வாய்க்காலாக மாறி வருகிறது. ஆற்றின் மையப் பகுதியில் உள்ள மரங்கள் மற்றும் புதர்களை அகற்றி தண்ணீர் தடங்கலின்றி செல்ல நீர் வள ஆதாரதுறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.