உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / குச்சனுார் சனீஸ்வரர் கோயில் ஆடிப்பெருந்திருவிழா ரத்து திருப்பணி நடப்பதை காட்டி அறிவிப்பு

குச்சனுார் சனீஸ்வரர் கோயில் ஆடிப்பெருந்திருவிழா ரத்து திருப்பணி நடப்பதை காட்டி அறிவிப்பு

சின்னமனூர் : தேனி மாவட்டம் குச்சனுார் சனீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் ஆடிப் பெருந்திருவிழா திருப்பணிகள் நடப்பதால் இந்தாண்டு ரத்து செய்யப்படுவதாக ஹிந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.தமிழகத்தில் சனீஸ்வரருக்கென்று தனி கோயில் குச்சனூரில் மட்டுமே உள்ளது. இங்கு சனீஸ்வரர் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். முப்பெரும் தெய்வங்களான பிரம்மா, விஷ்ணு, சிவன் இவருக்குள் ஐக்கியம் என்பதால் இங்கு மூலவர் ஆறு கண்களுடன் உள்ளார். சனீஸ்வரர் இரகு வம்சத்தில் பிறந்தவர் என்பதால் நெற்றியில் திருநாமம் தரித்தும் ஈஸ்வர பட்டம் பெற்றவர்களில் சிவபெருமானுக்கு அடுத்து சனீஸ்வர பகவான் திகழ்வதால் கிரீடத்தில் விபூதி பட்டையும் அணிந்துள்ளார்.ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் ஒவ்வொரு சனிக்கிழமையும் திருவிழா நடக்கும். 3வது சனிக்கிழமை பெருந்திருவிழாவாக நடக்கும். கடந்தாண்டு ஜூலை 22 ல் கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கி நடந்தது. ஆடி முதல் நாள் கொடியேற்றம் நடக்கும். அதன்படி இன்று (ஜூலை 17) ஆடி முதல் தேதி என்பதால் கொடியேற்றம் நடக்க வேண்டும். ஆனால் திருப்பணி வேலைகள் துவங்கி இருப்பதால் கொடிமரம் அகற்றப்பட்டுள்ளது. எனவே கொடியேற்றம் செய்ய முடியாது. முக்கிய நிகழ்வுகளான 3வது வார பெருந்திருவிழா, சனீஸ்வரர் - நீலாதேவி திருக்கல்யாணம், சக்தி கரகம் எடுத்தல், மஞ்சன காப்பு சாத்துதல், முளைப்பாரி ஊர்வலத்துடன் சக்தி கரகம் கலக்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'வழக்கமாக நடக்கும் ஆடிமாத திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. திருப்பணி வேலைகள் நடக்கிறது. ரூ. ஒரு கோடியே 21 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பீட்டில் உபயதாரர்களால் பணிகள் நடக்கிறது. திருப்பணி வேலைகள் துவங்கியுள்ளதால் கொடி மரம் அகற்றப்பட்டுள்ளது. இதனால் ஐதீகம், சாஸ்திர சம்பிரதாயங்களை கடைப்பிடிப்பதில் சிரமம் ஏற்படும். ஆனால் வழக்கம் போல ஆடி மாதம் பக்தர்கள் கோயிலிற்கு வந்து தரிசனம் செய்ய எந்த தடையும் இல்லை. வழக்கமான பூஜைகள் தொடர்ந்து நடக்கும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை