| ADDED : ஜூன் 23, 2024 04:48 AM
மூணாறு: இடுக்கி மாவட்டத்தில் மழை தொடர்வதால் இன்று கன மழைக்கான' ஆரஞ்ச் அலர்ட்' முன்னெச்சரிக்கை விடப்பட்டது.இடுக்கி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை ஜூன் 18 முதல் வலுவடைந்து பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் ஜூன் 21 முதல் மூன்று நாட்களுக்கு பலத்த மழைக்கான 'எல்லோ அலர்ட்' முன்னெச்சரிக்கை ஜூன் 20ல் வானிலை ஆய்வு மையம் விடுத்தது. அதன்பிறகு ஜூன் 22, 23 ஆகிய நாட்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக 'ஆரஞ்ச் அலர்ட்' விடுத்தது. அதன்படி மாவட்டத்தில் நேற்று மூணாறு உள்பட பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது. நேற்று காலை 8:00 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் சராசரி 22.8 மி.மீ., மழை பெய்தது. அதிகபட்சமாக தொடுபுழா தாலுகாவில் 44.6 மி.மீ., மழை பதிவானது.தாலுகா வாரியாக பதிவான மழையின் அளவு (மி.மீட்டரில்) தேவிகுளம் 21.4, உடும்பன்சோலை 8.8, பீர்மேடு 17.4, இடுக்கி 18.2, தொடுபுழா 44.6. மாவட்டத்தின் இன்று கனமழைக்கான 'ஆரஞ்ச் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளதால் பொது மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை விடுத்தது.முகாம்: மாவட்டத்தில் மழை தொடர்வதால் பாதிப்புகளை சமாளிக்கும் வகையில் கமாண்டர் அர்ஜூன்பால்ராஜ்புத் தலைமையில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் 35 பேர் கொண்ட குழு முகாமிட்டுள்ளனர். இடுக்கி கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தவர்களை நீர்வளத்துறை அமைச்சர் ரோஷிஅகஸ்டின், மாவட்ட கலெக்டர் ஷீபாஜார்ஜ் ஆகியோர் வரவேற்றனர். அக்குழு கடந்த காலங்களில் மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளுக்குச் சென்று நிலைமையை மதிப்பிடவும், புவியியல் துறையினரின் உதவியுடன் கள ஆய்வு நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.