| ADDED : மே 08, 2024 01:14 AM
தேனி:ரேஷன் கடைகளில் குறைவாக உள்ள பொருட்களுக்கு கூடுதல் அபராதம் விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பொருட்களை பொட்டலங்களில் வழங்க கோரியும் ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் மே 10ல் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.ரேஷன்கடை பணியாளர்கள் சங்க மாநில தலைவர் ஜெயசந்திரராஜா கூறியதாவது:ரேஷன் கடைகளுக்கு நுகர்பொருள் வாணிப கழகத்தில் இருந்து கூட்டுறவுத் துறை முதன்மை சங்கத்தின் மூலம் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. நுகர்பொருள் வாணிப கழக கோடவுன்களில் இருந்து ரேஷன் கடைகளுக்கு சரியான எடையில் பொருட்கள் அனுப்புவதில்லை. சர்க்கரை, துவரம்பருப்பு, கோதுமை எடை குறைவாகவும், பாமாயில் பெட்டிகளில் எண்ணிக்கை குறைந்து காணப்படுகின்றன.கோடவுன்களில் உயரதிகாரிகள் ஆய்வின் போது மட்டும் ஐந்து லோடுகள் எடை போட்டு அனுப்புகின்றனர். மற்ற நாட்களில் 10ம் தேதிக்குள் நகர்வு பணியை முடிக்க வேண்டும் என்ற முனைப்பில் 15 முதல் 20 லோடு வரை அனுப்புகின்றனர். கடைகளில் இருப்பு குறைவுக்கு பலமடங்கு அபராத தொகை விதித்துள்ளது வேதனை அளிக்கிறது. பொருட்களை சரியான எடையில் வழங்கி பின் அபராதம் விதிக்க வேண்டும். பொருட்களை பொட்டலமிட்டு வழங்க வேண்டும். கூடுதல் அபராத கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். ரேஷன் கடைகளில் கட்டாய இறக்கு கூலி வசூலிப்பதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரம், கலெக்டர் அலுவலகங்கள் முன் மே 10ல் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். கோரிக்கைகளை நிறைவேற்ற கூறி உணவுப்பொருள் வழங்கல், நுர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமை செயலாளருக்கு கடிதம் அனுப்பி உள்ளோம் என்றார்.