உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ரோட்டில் இடையூறாக வைக்கும் விளம்பர பலகைகளால் விபத்து அபாயம்

ரோட்டில் இடையூறாக வைக்கும் விளம்பர பலகைகளால் விபத்து அபாயம்

தேனி : தேனி பாரஸ்ட் ரோட்டில் தெருக்களுக்கு திரும்பும் இடத்தில் வைத்துள்ள கடை விளம்பரப் பலகைகள் வைப்பதால் விபத்து அபாயம் ஏற்படுவதாக பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.தேனி அல்லிநகரம் நகராட்சி 27 வது வார்டில் பாரஸ்ட் ரோடு 2, 3, 4வது தெருக்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள 500 வீடுகளில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இந்த தெருக்களில் நகராட்சி சார்பில் ஆங்காங்கே வீட்டு உபயோகத்திற்காக பல இடங்களில் பிளாஸ்டிக் தொட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அவை ஓராண்டிற்கும் மேலாக பராமரிப்பு இன்றி பயன்படாமல் ரோட்டின் ஓரத்தில் ஆக்கிரமிப்பாக காட்சி அளிக்கின்றன. பயன்பாட்டில் இல்லாத தொட்டிகள் அருகே சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இப்பகுதியில் பெரும்பாலான வீடுகளில் ஆழ்துளை கிணறுகள் உள்ளதால் நகராட்சி குடிநீரை பலர் சாக்கடையில் விடும் நிலை தொடர்கிறது. தேவையான அளவு குடிநீரை பிடித்த பின் குழாய்களை மூடி வைப்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இப்பகுதியில் அடிப்படை பிரச்னைகள் பற்றி குடியிருப்போர் கூறியதாவது:

தொடரும் விபத்துக்கள்

அழகேசன், பாரஸ்ட் ரோடு 2வது தெரு, தேனி: மெயின் ரோடும், தெருவும் இணையும் இடத்தில் உள்ள வளைவான பகுதியில் கடை நடத்துவோர் எதிரே வரும் வாகனங்கள் தெரியாதவாறு விளம்பர பலகைகள் வைக்கின்றனர். இதனால் தெருவில் இருந்து மெயின் ரோட்டிற்கு வாகனங்களில் செல்பவர்கள் விபத்துக்களில் சிக்கி காயமடைவது தொடர்கிறது. தெருக்களில் இரு புறங்களிலும் வண்டிகள், கார்கள் நிறுத்திக்கொள்வதால் அவசர காலத்தில் ஆம்புலன்ஸ் வந்து செல்ல சிரமமாக உள்ளது. சாக்கடை முறையாக சுத்தம் செய்யாததால் சுகாதார கேடு நிலவுகிறது. விபத்துக்களை ஏற்படுத்தும் விளம்பர பலகைகளை அகற்றவும், சாக்கடைகளை துார்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்., என்றார்.

பாதாள சாக்கடை வசதி இல்லை

சரவணேஸ்வரி, பாரஸ்ட் ரோடு 3வது தெரு : பாரஸ்ட் ரோடு 3வது தெருவில் பாதாள சாக்கடை இணைப்பு வழங்கி உள்ளனர். ஆனால் குறுக்குத் தெருவில் உள்ள சில வீடுகளுக்கு மட்டும் இணைப்பு வழங்கவில்லை. இதனால் இந்த வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்ல வழியின்றி வீடுகளுக்கு முன் தேங்குகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதாரக்கேடு நிலவுகிறது. வீடுகளில் இருந்து குப்பை வாங்கி செல்ல பணியாளர்கள் சரிவர வருவதில்லை. மழைகாலத்தில் தெருவில் கழிவுநீர் தேங்குகின்றன. நகராட்சி அலுவலகம், கலெக்டர் அலுவலகத்தில் மனுக்கள் வழங்கினால் மட்டும் அதிகாரிகள் ஆய்வு செய்து செல்கின்றனர். ஆனால் நடவடிக்கை எடுப்பதில்லை., என்றார்.

சேதமடைந்த பேவர் பிளாக் ரோடு

சுப்புராஜ், வியாபாரி, பாரஸ்ட்ரோடு 3வது தெரு: பாரஸட் ரோட்டில் உள்ள தெருக்களில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டு உள்ளன. நகராட்சி சார்பில் குடிநீர் இணைப்பு வழங்கும் போது குழிகள் தோண்டப்பட்டு பின் பேவர் பிளாக் கற்கள் முறையாக பதிக்கவில்லை. பல இடங்களில் பேவர் பிளாக் கற்கள் இன்றி ரோடு மேடு பள்ளமாக உள்ளன. இதில் டூவீலர்களில் வருவோர் தடுமாறி விழுவதும், வயதானவர்கள் நடந்து செல்லும் போது விழுந்து காயமடைவதும் தொடர்கிறது. சேதமடைந்த பேவர்பிளாக் கற்கள் பதித்த ரோட்டினை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்., என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்