| ADDED : ஜூலை 17, 2024 07:57 PM
தேனி:வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாகக்கூறி நால்வரிடம் ரூ.23 லட்சம் மோசடி செய்த திருச்சியை சேர்ந்த பட்டதாரி ஜெரோமை 39, தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். தேனி பழனிசெட்டிபட்டி ஆனந்தரூபன் 25. டிப்ளமோ படித்து விட்டு வெளிநாட்டில் வேலைக்கு முயற்சித்தார். திருச்சியை தலைமையிடமாக கொண்டு தேனியில் செயல்படும் வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பும் நிறுவனம் பற்றி தெரிந்தது. இதனை திருச்சி கருமண்டபம் குரு ஈஸ்வர், அவரது சகோதரர் பரணிதரன் நடத்தி வந்தனர். தேனி கிளை மேலாளராக கே.ஆர்.ஆர்., நகர் குமார் இருந்தார். அவர் ஆனந்தரூபனிடம், வெளிநாட்டு வேலை வேண்டும் என்றால் ரூ.8 லட்சம், கட்டணமாக ரூ.20 ஆயிரம் செலுத்த வேண்டும் என்றார். அதனை வைத்து திருச்சி கருமண்டபம் பி.எஸ்சி., பட்டதாரி ஜெரோம், நடத்தும் நிறுவனம் மூலம் வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறினார்.இதனை நம்பிய ஆனந்தரூபன் ரூ.8.20 லட்சத்தை குருஈஸ்வர், பரணிதரன், குமாரிடம் வழங்கினார். அவர்கள் ஜெரோம் மூலம் நியூசிலாந்தில் ஓட்டல் மேற்பார்வையாளராக வேலை வாங்கித் தருவதாக கூறினர். அதன் பின் ஓராண்டிற்கு மேலாக வேலை வாங்கி தராமலும், பணத்தை திருப்பித் தராமலும் ஏமாற்றினர். இவர்களை பற்றி ஆனந்தரூபன் விசாரித்தபோது, நால்வரும் இணைந்து தேனி அரவிந்திடம் ரூ.5.85 லட்சம், மதுரை பாலமுருகனிடம் ரூ. 6 லட்சம், மதுரைவீரனிடம் ரூ.3 லட்சம் என மொத்தம் ரூ. 23.05 லட்சத்தை மோசடி செய்தது தெரிந்தது. அதன்பின் தேனி எஸ்.பி., சிவபிரசாத்திடம் ஆனந்தரூபன் புகார் அளித்தார். எஸ்.பி., உத்தரவில் நால்வர் மீதும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் திருச்சியில் இருந்த ஜெரோமை இன்ஸ்பெக்டர் மாயாராஜலட்சுமி தலைமையிலான போலீசார் நேற்று கைது செய்தனர்.