உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கழிவு நீரால் சுகாதாரக்கேடு; தெருநாய்களால் அச்சுறுத்தல் நாள்தோறும் சிரமப்படும் பாரஸ்ட் ரோடு 25வது வார்டு மக்கள்

கழிவு நீரால் சுகாதாரக்கேடு; தெருநாய்களால் அச்சுறுத்தல் நாள்தோறும் சிரமப்படும் பாரஸ்ட் ரோடு 25வது வார்டு மக்கள்

தேனி: தேனி அல்லிநகரம் நகராட்சி 25வது வார்டு பாரஸ்ட்ரோடு 6வது தெருவில் சாக்கடை சேதமடைந்துள்ளதால் மழை காலத்தில் வீடுகளுக்குள் கழிவுநீர் வருவது தொடர்கிறது. மழைகாலம் துவங்கும் முன் அதனை சீரமைத்து தர வேண்டும் என, இப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இதில் 25 வது வார்டில் பெரியமாயன் தெரு, பப்புராஜா தெரு, எடமால் தெரு, கொண்டுராஜா தெரு, சேல்ஸ் சொசைட்டி தெரு, பாரஸ்ட் ரோடு 4, 5, 6 வது தெருக்கள் அமைந்துள்ளன. இதில் பாரஸ்ட் ரோடு 6வது தெருவில் 30க்கும் மேற்பட்ட வீடுகளில் 100க்கும் அதிகமானோர் வசிக்கின்றனர்.இத்தெருவில் பேவர் பிளாக் கற்கள் கொண்டு ரோடு அமைக்கப்பட்டது. இந்த ரோடு பல இடங்களில் சேதமடைந்து காணப்பட்டது. சில மாதங்களுக்கு முன் சேதமடைந்து பேவர் பிளாக் பதித்த ரோடு நகராட்சியால் சீரமைக்கப்பட்டது. ஆனால், சீரமைப்பு பணிக்குப் பின் நன்றாக இருந்த பகுதிகள் தற்போது பள்ளங்களாக உள்ளன. இதனால் முதியவர்கள், குழந்தைகள், டூவீலர்களில் வருவோர் தடுமாறி விழுகின்றனர்.இந்த தெருவின் கடைசியில் வீடுகளுக்கு உபயோகத்திற்கு நீர் பயன்படுத்தும் வகையில் பிளாஸ்டிக் தொட்டி அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் மின் மோட்டார் பழுது, தொட்டி சேதமடைந்ததால் அதனை சீரமைக்கவில்லை. இதனால் பலர் அருகில் உள்ள தெருவில் இருந்து வீட்டு உபயோகத்திற்கு தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்தும் நிலை உள்ளது. இத்தெருவில் உள்ள வீட்டு உபயோக நீர் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கே.ஆர்.ஆர்., நகர், சிவாஜிநகர் சாக்கடைகள் இந்த தெரு வழியாக செல்கின்றன. மழை காலத்தில் அதிக அளவில் கழிவுநீர் சாக்கடைகளில் செல்கிறது. பல இடங்களில் சாக்கடை சேதமடைந்துள்ளதால், கழிவு நீர் வீடுகள், குடிநீர் தொட்டிகளில் தேங்குகின்றன. இதனால் இந்த பகுதியில் வசிப்போர் வீடுகளை காலி செய்து செல்வது தொடர்கிறது.

சீரமைப்பது அவசியம்

சித்திரைபாண்டியன், பாரஸ்ட் ரோடு 6வது தெரு: சாக்கடைகள் பல இடங்களில் உடைந்து காணப்படுகிறது. இதனால் அதிக அளவில் கழிவு நீர் வரும் போது ரோட்டில் செல்லும் நிலை உள்ளது.சாக்கடையை சீரமைக்க நகராட்சியில் மனு அளித்தும் பயனில்லை.சேதமடைந்த பேவர்பிளாக் கற்கள் பதித்த ரோடு, சாக்கடையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்., என்றார்.

தெரு நாய்களால் தொல்லை

கற்பகம், பாரஸ்ட் ரோடு 6வது தெரு:இந்த பகுதியில் மாலை, இரவு நேரத்தில் தெருநாய்கள் தொல்லை அதிகம் உள்ளது. இதனால் பள்ளி முடிந்து வரும் மாணவர்கள், வேலை முடிந்து வருபவர்கள் பயத்துடன் கடக்க வேண்டி உள்ளது.சில தெரு நாய்கள் நோய்வாய்பட்டு காணப்படுகின்றன. இரவு நேரத்தில் சில தெருநாய்கள் துரத்துவது போல் வருவதால் டூவீலர்களில் செல்வோர் தடுமாறி கீழே விழுந்து காயம் ஏற்படுகிறது.எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்., என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி