| ADDED : ஜூன் 02, 2024 04:14 AM
தேனி: தேனி வாரசந்தை நுழைவு பகுதியில் ஆட்டோக்களை நிறுத்துவதால் பெரியகுளம் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து போலீசாரும் கண்டு கொள்ளாததால் பொதுமக்கள், வாகனஓட்டிகள் பாதிக்கபடுகின்றனர்.தேனி பெரியகுளம் ரோட்டில் மேற்கு சந்தையில் உள்ள கவுமாரியம்மன் கோயிலை சுற்றி வாரச்சந்தை சனிதோறும் நடக்கிறது. சந்தையில் காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் என அனைத்து பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன. சந்தையை தேனி அல்லிநகரம் நகராட்சி நிர்வாகம் நிர்வகித்து வருகிறது. சந்தையில் பொருட்கள் வாங்க தேனி, அல்லிநகரம், பூதிப்புரம், அரண்மனைப்புதுார், கொடுவிலார்பட்ட என சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வருகின்றனர். ஆனால் வாகனங்கள் நிறுத்துவதற்கு நகராட்சி எந்த ஒரு ஏற்பாடும் செய்ய வில்லை.பெரியகுளம் ரோட்டில் சந்தை நுழைவாயிலில் ஆட்டோக்கள் வரிசையாக நிறுத்தப்படுகிறது. இதனால் சந்தையில் பொருட்கள் வாங்க செல்ல பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகுகின்றனர். பின்தொடர்ந்து வரும் கனரக வாகனங்களும் வரிசையாக நிறுத்தப்படுகின்றனர். இதனால் சந்தை நாளில் தேனி பெரியகுளம் ரோட்டில் போக்குவரத்து நெரிசில் தொடர்கிறது. நெரிசல் சிக்னல் வரை நிற்கும் போது மட்டும் போலீசார் கவனிக்கின்றனர். மற்ற நேரங்களில் கண்டு கொள்ளாமல் உள்ளனர். வாரசந்தை நடக்கும் நாட்களில் போக்குவரத்தை சீர்படுத்த அப்பகுதியில் போலீசார் பணியமர்த்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.