| ADDED : ஏப் 20, 2024 06:19 AM
போடி: போடி அருகே டி.புதுக்கோட்டை இந்திரா காலனியில் அடிப்படை வசதி செய்து தராததை கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சின்னமனூர் ஒன்றியம், பொட்டிபுரம் ஊராட்சி,டி.புதுக்கோட்டை முதல் வார்டு இந்திரா காலனியில் 300 குடும்பங்கள் உள்ளனர். இங்கு 570 வாக்காளர்கள் உள்ளனர். இப்பகுதியில் ரோடு, குடிநீர்,சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி சிரமம் அடைந்து வருகின்றனர். இவ்வசதிகள் செய்து தர கோரி ஊராட்சியில் மக்கள் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. நேற்று அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து மக்கள் தேர்தலை புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.சம்பவ இடத்திற்கு வந்த ஏ.டி.எஸ்.பி., விவேகானந்தன், டி.எஸ்.பி., பெரியசாமி தாலுகா இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை முடிவு எட்டவில்லை. இதனால் காலை ஏழு மணி முதல் மாலை 4 மணி வரை வாக்காளர்கள் ஓட்டு போட வராததால் பூத் எண் 196 க்கான ஓட்டுச்சாவடி வெறிச்சோடி இருந்தது.உத்தமபாளையம் தாசில்தார் சுந்தர்லால், திட்ட இயக்குனர் அமுதா, சின்னமனூர் பி.டி.ஓ., பாரதமணி, பொட்டிப்புரம் ஊராட்சி தலைவர் செல்வராஜ் பல மணி நேரம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன் பின் வசதிகள் செய்து தருவதாக உத்தரவாதம் அளித்தன் கலைந்து சென்று பின் ஓட்டளித்தனர்.