| ADDED : ஜூன் 29, 2024 04:59 AM
தேனி, பூதிப்புரம் பேரூராட்சி பகுதியில் பொது மக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வலியுறுத்தி அப்பகுதி பெண்கள் தங்களது கண்களில் கருப்புத்துணி கட்டி நுாதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பின் கலைந்து சென்றனர்.இப்பேரூராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்குகிறது. தினமும் ஏராளமான மக்கள் மருத்துவ சிகிச்சை பெற வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனை செல்லும் ரோட்டின் இடதுபுறம் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு மதுபோதை ஆசாமிகளால் மருத்துவமனைக்கு செல்லும் பெண்கள், பொது மக்களுக்கு இடையூறு செய்வது அதிகரித்துள்ளது.குறிப்பாக ரோட்டின் இருபுறங்களில் டூவீலர்களை நிறுத்துவது, போதையில் ரோட்டின் நடுவே அரைகுறையாக பெண்கள் கூச்சப்படும் அளவில் படுத்து கிடப்பது, பெண்களிடம் தகராறில் ஈடுபடுவது தொடர்ந்தது. இதனால் அப்பகுதி மக்கள் கடந்த மாதம் பூதிப்புரம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு டாஸ்மாக் கடையை இடமாற்ற செய்ய வலியுறுத்தினர். அப்போது மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விரைவில் இடமாற்றம் செய்யப்படும் என தெரிவித்தால் மக்கள் கலைந்து சென்றனர். அதன்பின் ஒரு மாதம் ஆன நிலையில் நேற்று பொது மக்கள் தங்களது கண்களில் கருப்புத்துணியை கட்டிக் கொண்டு, இந்திய ஐக்கிய கம்யூ., கட்சி மாவட்டச் செயலாளர் பெத்தாட்சி ஆசாத், கட்சிநிர்வாகிகள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டனர். பழனிசெட்டிபட்டி இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடந்திய பின் கலைந்துசென்றனர்.