| ADDED : ஜூலை 06, 2024 05:52 AM
பெரியகுளம் : பெரியகுளம் மூன்றாந்தல் கிழக்கு, மேற்கு பகுதிகளிலும் இருந்த பயணிகள் நிழற் கூரை ஆக்கிரமிப்பு அகற்றிய போது இடிக்கப்பட்டதால் பயணிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.பெரியகுளம் தென்கரையில் திண்டுக்கல்- குமுளி மாநில சாலையில், வைகை அணை ரோடு சந்திப்பு முதல் தேனி ரோட்டில் உள்ள சினிமா தியேட்டர் வரை ஒரு கி.மீ., தூரத்திற்கு இரு புறமும் இருந்த ரோட்டோர ஆக்கிரமிப்புகள் சில மாதங்களுக்கு முன் நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றினர். அப்போது மூன்றாந்தலிருந்து வத்தலகுண்டு, திண்டுக்கல், திருச்சி மார்க்கமாக பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக இருந்த நிழற் கூரையும், இதே போல் எதிர்புறம் தேனி, போடி, கம்பம் உட்பட பல்வேறு ஊர்களுக்கு செல்லும் பயணிகள் நிழற் கூரைகளை இடித்து அகற்றினர். நெடுஞ்சாலைத்துறை அனுமதியுடன் நிழற்கூரை கட்டி பயன்பாட்டில் இருந்தது. இதனை ஆக்கிரமிப்பு என கூறி இடித்து அகற்றினர். தற்போது பயணிகள் வெயில், மழையில் நனைந்தபடி பஸ்சிற்கு காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மூன்றாந்தலிருந்து தற்காலிக ஏற்படாக வத்தலகுண்டு, திண்டுக்கல் பஸ்ஸ்டாபிற்கு மட்டும் தென்னக்கிடுகு பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பயணிகள் இட நெருக்கடியில் வெயிலுக்கு ஒதுங்கி நிற்கும் நிலை உள்ளது.இதில் பெண் பயணிகள் நிற்பதில்லை. நகராட்சி நிர்வாகம் இரு புறங்களிலும் நிரந்தரமாக பயணிகள் நிழற்கூரை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.