| ADDED : பிப் 12, 2024 05:50 AM
மூணாறு: மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்குச் சொந்தமான கன்னிமலை எஸ்டேட் லோயர் டிவிஷனில் புலியிடம் சிக்கி ஒரு பசு பலியான நிலையில், உடனிருந்த வேறொரு பசு பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி வருகிறது.அங்கு தோட்டத் தொழிலாளியான பழனியம்மாளின் மூன்று பசுக்கள் நேற்று முன்தினம் மேய்ச்சலுக்குச் சென்றன. அதில் ஒன்று வீடு திரும்பிய நிலையில் 2 பசுக்கள் காணாமல் போனது. அவற்றை தேடிய போது அதே பகுதியில் தேயிலை தோட்ட எண் 2ல் ஒரு பசு பலத்த காயங்களுடனும், ஒரு பசு இறந்த நிலையிலும் கிடந்தன. அப்பகுதியில் நடத்திய ஆய்வில் பசுக்கள் இரண்டும் புலியிடம் சிக்கியதாக தெரியவந்தது. அதனை வனத்துறையினரும் உறுதி செய்தனர். மூணாறு வனத்துறையினர் பசு இறந்து கிடந்த பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணித்து வருகின்றனர். அதிகரிப்பு
சமீபகாலமாக மூணாறு பகுதியில் புலி, சிறுத்தை ஆகியவற்றின் நடமாட்டம் அதிகரித்து, அவற்றிடம் சிக்கி பலியாகும் கால்நடைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. அவற்றிடம் சிக்கி கடந்த ஆறு மாதங்களில் 32 பசுக்கள் பலியாகி உள்ளன. ஐந்து பசுக்கள் பலத்த காயங்களுடன் உயிர் தப்பின.இறந்த பசுக்களுக்கு இழப்பீடு தொகை வழங்க வனத்துறையினர் காலம் தாழ்த்தி வருகின்றனர். அதனால் பல தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே காலதாமதம் இன்றி இழப்பீடு வழங்க வனத்துறை முன்வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.