| ADDED : ஜூன் 17, 2024 12:06 AM
ஆண்டிபட்டி தாலுகாவில் கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, பாலுாத்து, வருஷநாடு, சிங்கராஜபுரம், குமணன் தொழு, கோம்பைத் தொழு, ஆண்டிபட்டி, புள்ளிமான்கோம்பை அணைக்கரைப்பட்டி, வெள்ளையத்தேவன்பட்டி, அய்யனாபுரம், கரட்டுப்பட்டி, அரப்படித்தேவன்பட்டி ஆகிய பகுதிகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஏக்கரில் தென்னை விவசாயம் உள்ளன.இப்பகுதியில் விளையும் இளநீர், தேங்காய் ஆகியவை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு செல்கின்றன. மூன்று வாரங்களுக்கு முன் ரூ.12 முதல் ரூ.15 வரை இருந்த தேங்காய் விலை தற்போது ரூ.10 ஆக குறைந்துள்ளது. குறைந்து வரும் தேங்காய் விலை விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.தேங்காய் வியாபாரிகள் கூறியதாவது: கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநிலங்களில் தேங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. தற்போது கொப்பரை தேங்காய் விலை டன் ரூ.23 ஆயிரம் முதல் ரூ.24 ஆயிரம் வரை உள்ளது. சில்லறை விலையில் ரூ.10, ரூ.11 என விற்பனையாகிறது. தென்னை மரங்களுக்கான உரம், மருந்து, பராமரிப்புச் செலவுகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் தேங்காய் விலை குறைவு விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்னை விவசாயிகளுக்கு கட்டுபடியான விலை கிடைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.