உத்தமபாளையத்தில் மத்தியகுழு நெல் மாதிரிகள் சேகரிப்பு
உத்தமபாளையும்: உத்தமபாளையத்தில் நெல் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு செய்து நெல் மாதிரிகளை எடுத்து சென்றனர். புயல் மழையால் ஈரப்பதமான நெல்லை அரசு கொள்முதல் செய்யும் போது 17 சதவீதம் ஈரப்பதம் வரை அனுமதிக்கிறது. இதனை 22 சதவீதமாக அதிகரிக்க விவசாயிகள் கோரி வருகின்றனர். எனவே தமிழக அரசு மத்திய அரசுக்கு இது குறித்த கோரிக்கை விடுத்தது. இதனை ஏற்று பல்வேறு மாவட்டங்களில் மத்திய குழுக்கள் ஆய்வு செய்து நெல் மாதிரிகள் எடுத்து வருகின்றனர். உத்தமபாளையம் அருகே உள்ள நெல் கொள்முதல் நிலையத்திற்கு மத்திய குழுவிற்கு புட் கார்ப்பரேசன் துணை இயக்குநர் ஆர்.கே. ஷாகி தலைமையில் ராகுல் சர்மா, தனிஷ் சர்மா ஆகியோர் நேற்று முன்தினம் இரவு வந்தனர். கலெக்டர் ரஞ்ஜீத் சிங் உடன் வந்தார். நெல் கொள்முதல் நிலையத்தில் கொட்டி வைக்கப்பட்டிருந்த இரண்டு குவியல்களிலிருந்து தலா 4 கிலோ வீதம் மூன்று பைகளில் சாம்பிள் எடுத்துச் சென்றனர். கலெக்டர் கூறுகையில், இந்தாண்டு கூடுதல் மழை பெய்ததால் ஈரப்பதம் அதிகரிக்க கோரிக்கை எழுந்தது. மத்திய குழு ஆய்வு செய்து வெவ்வேறு நிலங்களில் இருந்து வந்த நெல்லில் 3 சாம்பிள்கள் எடுக்கப்பட்டது. இந்த நெல்லை ஆய்வக பரிசோதனைக்கு உட்படுத்தி அதன் முடிவுகளை தொடர்ந்து மத்திய அரசு கொள்கை அறிவிப்புக்களை வெளியிடும். தற்போது 4 நேரடி கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. சில இடங்களில் வயல்களின் தண்ணீர் தேங்கி உள்ளது. நீர் வழிந்த பின் அறுவடை நடைபெறும் போது கொள்முதல் நிலையம் நிறக்கப்படும். அடங்கல் தாமதம் இல்லாமல் வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்றார்.