உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு நேரடி பஸ்கள் அவசியம்! சுற்றுலாத்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு நேரடி பஸ்கள் அவசியம்! சுற்றுலாத்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை ஏப்., இறுதி வாரத்தில் அளிக்கப்பட்டு, அறிவிப்பு வெளியானது. அப்போது முதல் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்தது. இதனால் பெற்றோர்கள், மாணவர்கள் உட்பட பொது மக்கள் வெயிலில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக வெயில் குறைந்து கோடை மழை மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்துள்ளது. இதனால் மாவட்டத்தில் உள்ள நீர்வீழ்ச்சிகள், சுற்றுலாத் தலங்களில் இதமான சூழல் நிலவுகிறது.மாவட்டத்தில் கும்பக்கரை, சுருளி நீர்வீழ்ச்சி, சின்னசுருளி அருவி, மேகமலை, வைகை அணை, மஞ்சளாறு அணை, போடி மெட்டு உள்ளிட்ட ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. இவற்றிற்கு மாவட்ட தலைநகரில் இருந்து நேரடி பஸ் வசதி இல்லை. இதனால் சுற்றுலாவிற்காக வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள், மாணவர்களை சுற்றுலா அழைத்து செல்ல விரும்பும் பெற்றோர்கள் சுற்றுலா செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.மாவட்ட நிர்வாகம் சுற்றுலாத்துறை, போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் ஸ்டாண்டில் இருந்து சுற்றுலாத் தலங்களுக்கு போதிய எண்ணிக்கையில் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சுற்றுலாத் தலங்களில் போதிய அடிப்படை வசதிகளை அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் சுற்றுலாத் தலங்களுக்கு வருகை தருவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் போது சுற்றுலா சார்ந்து தொழில் செய்பவர்கள் பொருளாதாரம் மேம்படும். அரசுக்கும் வரி வருவாய் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கோடை விடுமுறை முடிந்த பின்பும் வார இறுதி நாட்களில் சுற்றுலாத் தலங்களுக்கான சிறப்பு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ