உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / விழிப்புணர்வு மாரத்தானில் குளறுபடி: தேனியில் வீரர்கள் சாலை மறியல்

விழிப்புணர்வு மாரத்தானில் குளறுபடி: தேனியில் வீரர்கள் சாலை மறியல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தேனி: தேனியில் மாவட்ட போலீசார், தனியார் நிறுவனம் சார்பில் நேற்று நடந்த போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தானில் பரிசு வழங்குவதில் குளறுபடி ஏற்பட்டது. போதிய முன் ஏற்பாடுகள் செய்யாததால் வீரர்கள் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், போட்டியில் பங்கேற்ற இரு சிறுமிகள் மயங்கி ரோட்டில் விழுந்தனர்.தேனியில் 'பெரிக்ஸ் அகாடமி', போலீசார் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் பிப். 4ல் (நேற்று) நடத்துவதாக விளம்பரம் செய்தனர். நுழைவு கட்டணமாக ரூ.300 வசூலித்தனர். வயது அடிப்படையில் போட்டி 5 பிரிவுகளாக நடத்தப்படும்.ஒவ்வொரு பிரிவிலும் முதல் 50 இடங்களை பிடிப்பவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதனால் இணையதளம் மூலம் பலரும் முன்பதிவு செய்தனர். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து மாரத்தானில் பங்கேற்க வீரர்கள் தேனிக்கு நேற்றுமுன்தினமே வந்து தங்கினர்.பெண்களுக்கான மாரத்தான் நேற்று காலை 6:45 மணிக்கு பங்களாமேட்டில் துவங்கியது.

மயங்கி விழுந்தனர்

தேனி டி.எஸ்.பி., பார்த்திபன் தலைமை வகித்தார். ஆனால் போதிய மருத்துவ முதலுதவி, குடிநீர் வசதிகள் செய்து தரவில்லை. தென்காசி மாவட்டத்தை சேர்ந்த இரு சிறுமிகள் ஓட்ட முடிவில் ரோட்டில் மயங்கி விழுந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.போட்டி துவங்கிய சில நிமிடங்களில் ஒவ்வொரு பிரிவிலும் 20 பேருக்கு மட்டும் சைக்கிள் வழங்கப்படும் என அறிவித்ததால் வீரர்கள் ஆவேசமடைந்தனர்.

வாக்குவாதம்

இதனிடையே ஆண்களுக்கு ஒரு பிரிவில் நடந்த போட்டியில் வெற்றி பெற்றதாக கூறி, சிலர் சைக்கிள் கேட்டு மேடையில் ஏறி, ஏற்பாட்டாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஏற்பாட்டாளர்கள் தப்பி ஓடினர்.இதற்கிடையில் சிலர் பரிசு வழங்க நிறுத்தப்பட்டு இருந்த சைக்கிள்களை எடுத்துச் சென்றனர். இதனால் மாரத்தான் ஓட்டம் நிறுத்தப்படுவதாக போலீசார் அறிவித்தனர்.இதனிடையே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், பதிவு கட்டணத்தை திரும்பி வழங்க வலியுறுத்தியும் கொச்சி- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள தேனி பங்களாமேட்டில் இரண்டரை மணிநேரம் வீரர்கள், பெற்றோர் மறியலில் ஈடுபட்டனர்.இதனால் பாதிக்கப்பட்ட போக்குவரத்து மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டது. போலீசார் நடத்துவதால் தான் முன்பதிவு செய்ததாக பலர் புகார் தெரிவித்தனர். ஏ.டி.எஸ்.பி., விவேகானந்தன் தலைமையில் நடந்த பேச்சு வார்த்தையில் மறியல் கைவிடப்பட்டது. பெரியகுளம் ஆர்.டி.ஓ., முத்துமாதவன், 'பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். உணவு உண்ண பணம் வழங்கியதால் கலைந்து சென்றனர்.

நால்வர் மீது வழக்கு

ரோடு மறியலில் ஈடுபட்டதாக தேனி வருஷநாடு சூர்யா, பூதிப்புரம் வீரமணி, சேலம் புதுப்பாளையம் சிவா, சித்திரபாளையம் தமிழ்ச்செல்வன் ஆகிய நால்வர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். புதுக்கோட்டை பாப்பன்வயல் கவிதா, போடி வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நிகழ்ச்சி நடத்திய பெரிக்ஸ் அகாடமி மீது நடவடிக்கை கோரி தேனி போலீசில் புகார் அளித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை