கால்நடை உதவியாளர் பணியிடம் நியமனம் செய்ய எதிர்பார்ப்பு
கம்பம்: தேனி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்கள் நியமனம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கால்நடை பராமரிப்பு துறையில் உதவியாளர் பணியிடங்களை அந்தந்த மாவட்ட இணை இயக்குநர்கள் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் விண்ணப்பங்களை பெற்று நேர்காணல் நடத்தி நியமனம் செய்து கொள்ள அரசு அனுமதி வழங்கியது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே நேர்காணல் நடைபெற்றது. கோர்ட் இடைக்காலத் தடை உத்தரவு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. பின் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கோர்ட்டில் இருந்த தடை விலக்கி கொள்ளப்பட்டது. மற்ற மாவட்டங்களிலும் பணி நியமனங்கள் நடந்து வருகிறது . திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களிலும் சமீபத்தில் நியமனங்கள் நடந்தது. ஆனால் தேனி மாவட்டத்தில் இதுவரை நியமனம் நடைபெறவில்லை. இது குறித்து கால்நடை பராமரிப்பு துறையில் விசாரித்த போது, 'தேனி மாவட்டத்தில் 37 பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த பணியிடங்களை நிரப்ப 2 ஆண்டுகளுக்கு முன் 4 நாட்கள் நேர்காணல் நடத்த முடிவு செய்து இரண்டு நாட்கள் நேர்காணல் நடந்தது. கோர்ட் தடையால் நேர்காணல் தொடர்ந்து நடைபெறவில்லை. இன்னமும் 2 நாட்கள் நடைபெற வேண்டி உள்ளது. விரைவில் நேர்காணலை முடித்து பணியிடங்கள் நிரப்பப்படும்,' என்றனர்.