| ADDED : பிப் 06, 2024 12:25 AM
தேனி : தேனி பஸ் ஸ்டாண்டுகளில் உணவுப்பாதுகாப்புத்துறையினர் ஆய்வு நடத்தியதில் 65 கிலோ கலாவதியான உணவுபொருட்கள், 15லிட்டர் குளிர்பானங்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.தேனி நகரில் பழைய பஸ் ஸ்டாண்ட், புதுபஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் பல்வேறு ஓட்டல்கள், சுவீட் ஸ்டால்கள், டீக்கடைகள் இயங்கி வருகின்றன. இங்கு செயல்படும் பல கடைகளில் காலாவதியான உணவுப்பொருட்கள் விற்பனை செய்யபடுவதாகவும், உணவுப்பண்டங்கள் கூடுதல் விலைக்கு விற்பதாகவும் கலெக்டருக்கு பொதுமக்கள் சார்பில் தொடர் புகார் சென்றன. கலெக்டர் ஷஜீவனா உத்தரவில் உணவுப்பாதுகாப்புத்துறை நியமன அலுலர் ராகவன் அறிவுறுத்தலில் உணவுப்பாதுகாப்பு அலுவலர்கள் பாண்டியராஜ், சக்தீஸ்வரன் உள்ளிட்ட குழுவினர் புது பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் உள்ள 21 கடைகளில் ஆய்வு நடத்தினர். இதில் பூஞ்சை படர்ந்த கேக்குகள், காலாவதி தேதி குறிப்பிடாத உணவுப்பொருட்கள், கெட்டுப்போன ஸ்வீட்ஸ் என ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள 65 கிலோ ஸ்வீட்ஸ், 15 லிட்டர் குளிர்பானங்களை பறிமுதல் செய்தனர். இப்பொருட்களை விற்பனை செய்த 3 கடைகளுக்கு தலா ஆயிரம் அபராதம் விதித்தனர். உணவுப்பொருட்கள் தரமற்றதாக இருந்தால் 94440 42322 என்ற அலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்க அறிவுறுத்தினர்.