| ADDED : டிச 28, 2025 04:17 AM
போடி: தமிழகத்தில் பிரிவினைவாதத்திற்கும், தேசியத்திற்கும் தான் போட்டி என போடியில் பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கூறினார். போடியில் நடந்த பா.ஜ., முப்பெரும் விழாவில் பங்கேற்ற எச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் முதல்வராக ஸ்டாலின் முதல்வராக வருவதற்கு முன்பு ரூ.4 லட்சத்து 30 ஆயிரம் கோடி கடனாக இருந்தது. தற்போது ரூ.9 லட்சத்து 30 ஆயிரம் கோடியாக உள்ளது. 5 ஆண்டுகளில் 5 லட்சம் கோடி கடனுடன் ஊதாரி அரசாக ஸ்டாலின் அரசு உள்ளது. ஹிந்துக்கள் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டும் தமிழக அரசு தடை விதித்து உள்ளது. ஹிந்துகளுக்கு விரோதமாக தீபத் தூணை சர்வே செய்த தமிழக அரசு தர்காவை சர்வே செய்தார்களா. மத வெறியை தூண்டும் வகையில் துணை முதல்வர் உதயநிதி மற்ற மதத்திற்கு நிதியை ஒதுக்கியதாக கூறுகிறார். ஹிந்து கோயிலுக்கு இதுவரை எந்த நிதியும் கொடுக்கவில்லை. ஹிந்து கோயில்கள், பள்ளிகளை சுரண்டும் தீய அரசாக உள்ளது. தமிழகத்தில் ஒரு திட்டமாவது மகாத்மா காந்தி பெயரில் உள்ளதா. கருணாநிதி பெயர் மட்டுமே உள்ளது. தமிழகத்தில் பிரிவினைவாதத்திற்கும், தேசியத்திற்கும் மட்டும்தான் போட்டி. அது இந்த தேர்தலில் நிரூபிக்கப்படும். இவ்வாறு கூறினார்.