| ADDED : டிச 01, 2025 12:51 AM
கம்பம்: ''சீட்டுக்காக தி.மு.க.,வுடன் இந்திய கம்யூ., கூட்டணி வைக்கவில்லை,'' என, தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டியில் அதன் மாநில செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்தார். அவர் கூறியதாவது: எத்தனை சீட்டுக்கள் கொடுத்தாலும் அ.தி.மு.க., வுடன் கூட்டணி சேர மாட்டோம். தி.மு.க.,வுடன் இந்திய கம்யூ., கட்சி கொள்கை கூட்டணி வைத்துள்ளது. த.வெ.க., கொள்கை இல்லாத கட்சி. அந்த கட்சியுடன் எந்த கட்சி கூட்டணி அமைத்தாலும் நாங்கள் தொடர்ந்து தி.மு.க., கூட்டணியில் தான் இருப்போம். பா.ஜ.,வை எதிர்க்கும் கொள்கையுடன் தி.மு.க.,வுடன் உள்ளோம். தேர்தலில் வெற்றியை தீர்மானிப்பது பணமோ அல்லது வலுவானவர்களோ கிடையாது. ஏழை சாமானிய மக்கள் தான் தீர்மானிக்கின்றனர். சீட்டை காட்டி, நோட்டை காட்டி எங்களை ஏமாற்ற முடியாது. யாருடைய கூட்டணியையும் பார்த்து எங்கள் கூட்டணி அஞ்சாது. கவர்னர் ரவிக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் எழுப்பும் குரலுடன் சேர்ந்து எங்கள் குரலும் தொடர்ந்து ஒலிக்கும். இது தமிழக மக்களுக்கான குரலாகும் என்றார்.