| ADDED : நவ 28, 2025 08:09 AM
தேனி: தேனியில் தேசிய நெஞ்சாலைத்துறை சார்பில் நடந்து வரும் மேம்பால பணியில் ரயில் தண்டவாளத்தின் மேல் கர்டர் அமைக்கும் பணியை கோடை விடுமுறையில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கொச்சி தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் தேனியில் ரயில்வே தண்டவாளம் அமைந்துள்ளது. ரயில் இயக்கப்படும் நேரங்களில் இவ்வழியாக செல்லும் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்கின்றன. இதனை தவிர்க்க சில ஆண்டுகளுக்கு முன் மேம்பாலம் கட்டும் பணி துவங்கியது. ரூ.100 கோடி மதிப்பில் தேனி பென்னிக்குவிக் நகர் பிரிவில் துவங்கி சிட்கோ அருகே தனியார் பள்ளி வரையிலும், புது பஸ் ஸ்டாண்ட் செல்லும் ரோட்டிலும் என மூன்று பகுதிகளில் இருந்து வாகனங்கள் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்படுகிறது. பாலம் அமைக்கும் பணியில் அரண்மனைப் புதுார் விலக்கு, சிப்காட் பகுதியில் பணிகள் முடிவடைந்து விட்டன. புது பஸ் ஸ்டாண்ட் ரோடு, ரயில் தண்டவாளத்திற்கு மேல்பகுதியில் கார்டர்கள் பொருத்தும் பணி, வாகனங்கள் செல்லும் வகையிலான சுரங்க பாதைகள் அமைக்கும் பணி மட்டும் மீதம் உள்ளன. இதுபற்றி தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: வேலுார் மாவட்டம் காட்பாடியில் தண்டவாளத்தின் மீது பொருத்து உள்ள கர்டர்கள் ரயில்வே அனுமதி பெற தயாராகி வருகிறது. கர்டர் தயாரிக்கும் பணி மார்ச்சில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அவை தயாரான பின் சாலை மார்க்கமாக மேம்பால பணிகள் நடைபெறும்பகுதிக்கு கொண்டு வரப்படும். தண்டவாளம் மீது அவை பொருத்தும் போது அவ்வழியாக வாகன போக்குவரத்து தடை செய்யப் படும். பள்ளி, கல்லுாரி விடுமுறை காலமான கோடை விடுமுறையில் அப்பணியை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். கர்டர்கள் பொருத்தும் பணி நிறைவடைந்தால் விரைவில் பாலம் பயன்பாட்டிற்கு வரும் என்றார்.