| ADDED : நவ 17, 2025 01:24 AM
கூடலுார்: ''மங்கலதேவி கண்ணகி கோயிலுக்கு தமிழக வனப்பகுதி வழியாக ரோடு வசதி செய்து தரப்படும்.'' என, கம்பத்தில் நடந்த பிரசாரத்தில் தே.மு.தி.க., பொதுச் செயலாளர் பிரேமலதா பேசினார். தே.மு.தி.க., சார்பில் 'உள்ளம் தேடி, இல்லம் நாடி', என்ற பெயரில் பொதுச் செயலாளர் பிரேமலதா சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று மாலை கம்பத்தில் நடந்த பிரசாரத்தில் அவர் பேசியதாவது: கடலுாரில் நடக்க உள்ள மக்கள் உரிமை மீட்பு மாநாடு உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் மாபெரும் வெற்றி மாநாடாக இருக்கும். தினம்தோறும் கேப்டன் கோயிலில் 3 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கிக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் எந்த கட்சியும் இவ்வாறு தொடர்ந்து உணவு வழங்கியது இல்லை. கேப்டன் விஜயகாந்தின் கொள்கைகளை மக்களுக்கு கொண்டு போய் சேர்க்க தே.மு.தி.க., தயாராக உள்ளது. எனவே 2026 தேர்தலில் தே.மு.தி.க., மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு வெற்றியை தேடி தர வேண்டும். கூடலுார் அருகே உள்ள பளியன்குடியில் இருந்து மங்கலதேவி கண்ணகி கோயிலுக்கு செல்லும் வனப்பாதை அமைத்து தரப்படும். எல்லைப் பகுதியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள குமுளி பஸ் ஸ்டாண்டிற்கு கண்ணகி பெயர் சூட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மாம்பழத்திற்கு நிரந்தரமான விலை நிர்ணயம் செய்யப்படும். நாட்டு மாடுகளுக்கு மலைகளில் மேய்ச்சலுக்கு அனுமதி பெற்று தரப்படும் என்றார். மாவட்டச் செயலாளர் செல்லத்துரை, மண்டல பொறுப்பாளர் பன்னீர், நிர்வாகிகள் உடனிருந்தனர்.