இந்நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. நகர்ப் பகுதியில் மரங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளன. மரக்கன்றுகள் வளர்க்க 2 தொண்டு நிறுவனங்கள் மட்டுமே முன் வந்துள்ளன. ஒன்றிய சாலை, மேகமலை ரோடு, மார்க்கையன்கோட்டை ரோடு, உள்ளிட்ட நகரில் பல பகுதிகளில் மரங்கன்றுகள் வளர்க்கலாம். தனியார் பள்ளி நிர்வாகங்களும் பசுமைச்சூழலை உருவாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன. இதற்கு என இப்பள்ளிகள் மாணவர் குழுக்களை பள்ளியில் தயார் படுத்தி வருகின்றன. இங்குள்ள கிருஷ்ணய்யர் மேல் நிலைப் பள்ளி வளாகங்களில் குறுங்காடு அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் சுற்றுப்புறச் சூழல் மாசுபடும் நிலை குறைய வாய்ப்புக்கள் ஏற்பட்டு உள்ளன. பள்ளிகள், தொண்டு நிறுவனங்கள் நடவடிக்கைகள் போல், நகராட்சி நிர்வாகம் விழிப்புணர்வு பணியை முன்னெடுக்க வேண்டும். நகராட்சி பள்ளிகளில் மரக்கன்றுகள், செடிகள் வளர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு பசுமை பாதுகாப்பு, பசுமை உருவாக்கம், சூழல் மாசு, ஒருங்கிணைந்த பசுமை வளர்ச்சிக்கான தொழில்நுட்ப நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெருமாள், துணைத் தலைவர், வணிகர் சங்க பேரமைப்பு: அரசு மருத்துவமனை வளாகம் பசுமை வளாகமாக மாற்றப்பட்டுள்ளது. மூலிகைத் தோட்டம் ஒன்றை அமைக்க வேண்டும். இதனால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு சுவாசிக்க சுத்தமான காற்று கிடைக்கும். வனத்துறை, ரோட்டரி கிளப் இணைந்து குறுங்காடு ஏற்படுத்தி உள்ளனர். இங்கு ஆடாதொடை, தூதுவளை, பச்சிலை, பிரண்டை உள்ளிட்ட பல்வேறு மூலிகைகளை வளர்க்க முயற்சிக்க வேண்டும். ஒவ்வொருவரின் வீட்டிலும் மூலிகை செடிகள் வளர்க்க வலியுறுத்தி அதற்கான உதவிகளையும் செய்ய முடிவு செய்துள்ளோம். எங்கள் பேரமைப்பின் சார்பில் இதற்கான நடவடிக்கைகள் எடுக்க உள்ளேன். சுற்றுப்புறச் சூழல் மாசில்லாமல் இருந்தால், நோய்கள் தாக்காது. எனவே மூலிகை செடிகள் வளர்ப்பு, அதன் பயன்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். மனோஜ்குமார், ஆலிலை பசுமை இயக்கம் கடந்தாண்டு எங்கள் இயக்கம் சார்பில் மேகமலை ரோட்டில் மரக்கன்றுகளை நடவு செய்தோம். சின்ன ஓவுலாபுரம் பள்ளி வளாகத்தில் குறுங்காடு அமைத்தோம். சின்னமனுார் நகருக்குள் குறுங்காடு அமைப்பது அல்லது வீதிகளில் மரக்கன்றுகள் நடவு செய்ய உள்ளோம். இதற்கு என வனத்துறையின் வைகை மண் வளப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளை சந்தித்து பேச உள்ளோம். ஆண்டுதோறும் ஜுன் 21 சுற்றுச்சூழல் தினமாக அனுஷ்டிக்கப் படுகிறது. ஜூன் முழுவதும், தினமும் மரக்கன்றுகள் நடுதல், மூலிகைச் செடிகள் வளர்த்தல் போன்றவற்றில் ஈடுபடவும், மாதம் முழுவதும் சுற்றுப்புறச் சூழல் மாசு படுவதன் காரணம் என்ன, அதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என, மாணவ மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் பயிற்சிகள் நடத்தி வருகிறோம். இதனால் சூழல்பாதுகாப்பு பணிகள் பங்கு பெரும்பாலனாதாக இருக்க வேண்டும். எங்கள் இயக்கம் அதற்கான முயற்சியை துவக்கியுள்ளது.