| ADDED : மார் 15, 2024 06:34 AM
பெரியகுளம் : பெரியகுளம் மூன்றாந்தல் காந்தி சிலை அருகே தனியார் மதுபாரை அகற்றுவதற்கு நகராட்சி கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.பெரியகுளம் நகராட்சி கூட்டம் தலைவர் சுமிதா (தி.மு.க.), தலைமையில் நடந்தது. கமிஷனர் மீனா, மேலாளர் கோவிந்தராஜ் சுகாதார ஆய்வாளர் அசன்முகமது முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் கூட்டத்தில் பேசியதாவது:நாகபாண்டி (பார்வர்டு பிளாக்): 25 வது வார்டில் தெரு விளக்கு, சாக்கடை சுத்தம் செய்யாமல் உள்ளது. 10ம் பகுதி நகராட்சி பள்ளியில் பழைய வகுப்பறைகள் கட்டடம் இடிக்கப்பட்டது. புதிய கட்டடம் எப்போது கட்டுப்படும்..மணி வெங்கடேசன் (அ.ம.மு.க.,): மில்லர் ரோட்டில் மீன் கடைகள் அதிகரித்து வருகிறது. கழிவுகளை கொட்டுவதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. இந்த ரோட்டில் கஞ்சா, மது போதையாளர்கள் அதிகளவில் வருகின்றனர். இங்கு கேட் அமைக்க வேண்டும்.தலைவர்: தென்கரை மார்க்கெட்டில் மீன் கடை வளாகம் அமைக்க சர்வே செய்யப்பட்டுள்ளது. மில்லர் ரோடு பயன்பாடு இல்லாத பகுதியில் கேட் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.முத்துலட்சுமி (அ.தி.மு.க.,): 29 வது வார்டு அர்ச்சுனத்தேவர் சத்துப் பகுதியில் பாதாள சாக்கடை இணைப்பு, குடிநீர் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது. அ.தி.மு.க., கவுன்சிலர் என்பதால் வார்டில் வளர்ச்சி பணிகள் செய்வதற்கு தி.மு.க., தலைவர் பாரபட்சம் காட்டுவதாக தெரிகிறது.தலைவர்: அனைத்து கவுன்சிலர்களும் ஒன்றுதான். யாரிடமும் பாரபட்சம் காட்டுவதில்லை. விரைவில் உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்.பால்பாண்டி (அ.ம.மு.க.,): பெரியகுளம் பஸ்ஸ்டாண்டிற்கு பஸ்கள் வருவதில்லை. பொதுமக்கள் பாதிக்கின்றனர். பஸ்கள் வர கவுன்சிலர்கள் உண்ணாவிரதம் இருக்க தயாராக உள்ளோம். நகராட்சி தலைவரும் பங்கேற்க வேண்டும்.தலைவர்: பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ்கள் வருவதில்லை என அதிக புகார் உள்ளது. அரசு போக்குவரத்து கழக மேலாளரிடம் புகார் தெரிவிப்போம், பஸ்கள் வராமல் இருக்க தடைபோடும்'டைம் கீப்பர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும்.மதன்குமார்(மா.கம்யூ.,): கடந்த கூட்டத்தில் நகராட்சி துணைத் தலைவர் ராஜா முகமது (தி.மு.க.,) மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தது என்னாச்சு.மீனா (கமிஷனர்): இது குறித்து நகராட்சி மண்டல நிர்வாக இயக்குனரிடம் பரிந்துரை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.குமரன் (பா.ம.க.,): பெரியகுளம் மூன்றாந்தல் பகுதியில் தனியார் மதுபாரினால் பெண்களுக்கு போதை ஆசாமியால் அடிக்கடி அச்சுறுத்தல், போக்குவரத்து இடையூறு தினமும் நடக்கிறது. எனவே இந்த பாரினை அகற்ற வேண்டும். இதனை அனைத்து கவுன்சிலர்களும் ஆமோதித்ததால், இதனை அகற்றுவதற்கு சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் 57 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.