| ADDED : ஆக 11, 2011 11:17 PM
தேனி : ஹைவேவிஸ், மேகமலை மலைக்கிராமங்களுக்கு தகவல் தொடர்பு, போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும். சின்னமனூரை அடுத்துள்ள மேகமலையில் கடானா எஸ்டேட், மேகமலை, ஹைவேவிஸ், மணலாறு, இரவங்கலாறு ஆகிய மலைக்கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் பி.எஸ்.என்.எல்., டவர் மூலம் சிக்னல் கிடைப்பதில்லை. இதனால் இப்பகுதி மக்களுக்கு தகவல் தொடர்பு வசதி கிடைக்கவில்லை. இது பற்றி பல முறை புகார் செய்தும் பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. சின்னமனூரில் இருந்து இந்த மலைக்கிராமங்களுக்கு செல்லும் பாதை பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. எனவே இக்கிராமங்களுக்கு போக்குவரத்து வசதியும் துண்டிக்கப்பட்டுள்ளது. இங்கு வசிக்கும் பல ஆயிரம் பேர் அவசர மருத்துவ வசதிக்கு கூட சின்னமனூர் வர பஸ் இல்லாமல் சிரமம் அடைகின்றனர். அவசரமாக செல்ல அதிக பணம் கொடுத்து தனியார் ஜீப்களை சிலர் பயன்படுத்துகின்றனர். இக்கிராமங்களுக்கு தேவையான தகவல் தொடர்பு, ரோடு, போக்குவரத்து வசதிகள் செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.