| ADDED : ஜன 22, 2024 11:27 PM
ஆண்டிபட்டி, : தேனி அரசு மருத்துவக் கல்லூரி உடற்கூறுயியல் துறை பேராசிரியர் எழிலரசன் 52, தன்னை சிலர் மிரட்டியதாக பூச்சி மருந்து குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்கிறார்.டாக்டர் எழிலரசன் தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் உடற்கூறுயியல் துறையில் பேராசிரியராக 2004 முதல் பணியாற்றி வந்தார். கல்லூரியில் 2019 --- 2021ல் டாக்டர்கள் சௌமியா 40, சரண்யா 35, திலகரசி 35, காந்திமதி 46 ஆகியோர் முதுநிலை மருத்துவப் படிப்பு படித்துள்ளனர்.முதுநிலை மருத்துவ படிப்பு படித்த டாக்டர்கள் தங்களுக்கு பேராசிரியர் எழிலரசன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கடந்தாண்டு நவம்பரில் சென்னை மருத்துவக் கல்வி இயக்குனரிடம் புகார் அளித்தனர்.புகார் குறித்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் சுகந்தி, திருச்சி மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் அக்ஷயா, தேனி மருத்துவக் கல்லூரி ஆர்.எம்.ஓ., டாக்டர் சந்திரா கொண்ட குழு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அரங்கில் டாக்டர் எழிலரசன் மற்றும் புகார் கூறியவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.இந்த விசாரணைக்கு பின் புகார் கொடுத்த டாக்டர்கள் மற்றும் அவரது கணவர்கள் தனக்கு மிரட்டல் விடுத்ததாக பேராசிரியர் எழிலரசன் க.விலக்கு போலீசில் புகார் செய்துள்ளார்.பேராசிரியர் எழிலரசன் மீது தேனி கலெக்டரிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் இரு தரப்பினரையும் அழைத்து ஜனவரி 19 ல் மாவட்ட சமூக நல அலுவலர் சியாமளா விசாரணை செய்துள்ளார். விசாரணைக்குப் பின் பேராசிரியர் எழிலரசன் தனது மகளைப் பற்றி பாலியல் ரீதியாக தவறாக பேசி உள்ளனர். மேலும் டாக்டர் சௌமியாவின் கார் டிரைவர், எழிலரசன் க.விலக்கு போலீசில் கொடுத்த புகாரை வாபஸ் வாங்க சொல்லியும் மிரட்டி உள்ளார். இதனால் மன உளைச்சல் அடைந்த எழிலரசன் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கார் பார்க்கிங்கில் பூச்சி மருந்து குடித்து விட்டார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அவசர பிரிவில் சேர்த்துள்ளனர்.