| ADDED : ஆக 09, 2024 12:31 AM
உத்தமபாளையம்: அனைத்து வீடுகளுக்கும் பாதுகாப்பான குடிநீர் வழங்கும் 'அம்ரூத்' திட்டப் பணிகளை முடிக்காத பேரூராட்சிகளுக்கு எந்த புதிய திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு கிடையாது என்று பேரூராட்சிகளின் இயக்குனரகம் அறிவித்துள்ளது.தேனி மாவட்டத்தில் 22 பேரூராட்சிகள் உள்ளன. அனைத்து வீடுகளுக்கும் பாதுகாப்பான குடிநீர் தினமும்வழங்க 'அம்ரூத்' திட்டம் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இத் திட்டம் மூலம் ஒவ்வொரு பேரூராட்சிக்கும் கோடிக் கணக்கில் நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளது.உத்தமபாளையம் பேரூராட்சிக்கு இந்த திட்டத்தில் ரூ.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதே போல் பல பேரூராட்சிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டன. ஆனால் சில பேரூராட்சிகளில் இத் திட்ட பணிகள் மேற்கொள்ளாமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளனர்.அம்ரூத் திட்டப் பணிகளை முடித்தால் தான் புதிய திட்ட பணிகளுக்கான அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடுகள் தரப்படும் என்று பேரூராட்சிகள் இயக்குனரகம் அறிவித்துள்ளது. இதனால் உத்தமபாளையம், அனுமந்தன்பட்டி, புதுப்பட்டி, காமயகவுண்டன்பட்டி உள்ளிட்ட சில பேரூராட்சிகளுக்கு எந்த புதிய திட்டமும் கிடைக்கவில்லை.உத்தமபாளையம் பேரூராட்சியில் 2011ல் மெயின்ரோடு மற்றும் வடக்கு, கிழக்கு, மேற்கு ரத வீதிகள் புதுப்பிக்கப்பட்டது. புதுப்பிக்கப்பட்டு 13 ஆண்டுகளை கடந்து விட்டது. ஊரில் உள்ள மொத்தம் 3 வீதிகளில் இரண்டு வீதிகள் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறி விட்டது.ரோட்டை பராமரிக்க என்ன தயக்கம் என பேரூராட்சி வட்டாரங்களில் விசாரித்த போது, அம்ரூத் திட்டப் பணிகளை முடித்தால் தான் பிற பணிகளுக்கு நிதி தருவோம் என்கின்றனர் என கூறுகின்றனர். இந்த விவகாரத்தில் கலெக்டர் கவனம் செலுத்த பெதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.