| ADDED : டிச 08, 2025 06:30 AM
உத்தமபாளையம்: கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்க மாநில அரசு நிதி ஒதுக்கி தேவையான பணியாளர்கள் நியமனம் செய்து உட்கட்டமைப்பு வசதிசிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தமபாளையம் வழக்கறிஞர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.உத்தமபாளையத்தில் நீதித்துறை நடுவர் நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், சார்பு நீதிமன்றம், விரைவு நீதிமன்றம் உள்ளன. உத்தமபாளையம் தாலுகா அதிக பகுதிகளை கொண்ட பகுதியாகும். இங்குள்ள பொது மக்கள் தங்களின் வழக்கு விசாரணைக்காக உத்தமபாளையம் வருகின்றனர்.இப்பகுதியில் மக்களின் 60 சதவீத வழக்குகள் தேனி (சிவில் மற்றும் கிரிமினல்) மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகின்றன. உத்தமபாளையம் முதல் தேனி லட்சுமிபுரம் நீதிமன்றத்திற்கு வழக்கறிஞர்கள், பொது மக்கள் வாய்தாவிற்கு செல்ல ஒரு மணி நேரம் பயணம் செய்து செல்ல வேண்டும். இரண்டு பஸ்கள் மாறி செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. தேனி லட்சுமிபுரத்தில் உள்ள கூடுதல் மாவட்ட நீதிமன்றத்திற்கு அதிகார எல்லையாக உத்தமபாளையம், போடி, ஆண்டிபட்டி தாலுகாக்கள் உள்ளன. இதனால் அந்நீதிமன்றத்தில் பணிப் பளுவும் அதிகரித்துள்ளன. ஒரு ஆர்.டி.ஓ., தலைமையிடத்தில், கூடுதல் மாவட்ட நீதிமன்றம் இருக்க வேண்டும் என்பது சட்டமாகும். ஆனாலும் நீதிமன்றம் இல்லை. உயர்நீதிமன்றம் கூடுதல் நீதிமன்றம் அமைக்க ஒப்புதல் அளித்தாலும், உத்தமபாளையத்தில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைய அரசின் உத்தரவு தேவை. அதாவது புதிதாக அமைக்கப்படும் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்திற்கு புதிய கட்டடங்கள், பணியாளர்கள் நியமனம், அவர்களின் சம்பளம், பர்னிச்சர்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் செய்ய அரசின் உத்தரவு அவசியமாகிறது. ஆனால் அரசின் அனுமதி கிடைக்காததால் தான் உத்தமபாளையத்தில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமையாமல் இழுபறியாக உள்ளது. உத்தமபாளையம் வழக்கறிஞர் சங்கத் தலைவர் வழக்கறிஞர் உமாபதி கூறுகையில், ''எங்களின் நீண்ட நாள் கோரிக்கை இது. தற்போதுள்ள கட்டடத்தில் செயல்பட போதிய இட வசதி உள்ளது. கோம்பை ரோட்டில் சிக்கச்சியம்மன் கோயில் அருகில் நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன. நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகளின் குடியிருப்புகளும் உள்ளன. எனவே அரசு உத்தரவு பிறப்பித்தால் போதும். மாநில அரசு பொது மக்கள், வழக்கறிஞர்கள் நலன் கருதி, உத்தமபாளையத்தில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்க முன் வர வேண்டும்.'', என்றார்.மாவட்ட நீதிமன்றம் பரிந்துரை
உத்தமபாளையம் பகுதியை சேர்ந்த உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பணியாற்றிய நீதிபதிகள் முருகேசன், ரகுபதி உள்ளிட்டோரிடம் நேரில், வழக்கறிஞர்கள் நிலையை விளக்கி கோரிக்கை மனுவும் அளித்துள்ளனர். அதன் பேரில் பல ஆண்டுகளுக்கு முன்பே, உத்தமபாளையத்தில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்க, உயர்நீதிமன்றம் கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டது. தேனி மாவட்ட நீதிமன்றமும் பரிந்துரை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.